விக்கிரவாண்டி : பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி தென் மாவட்டங்களுக்கு வாகனங்கள் அணிவகுத்து சென்றன.
பொங்கல் பண்டிகைக்கு இன்று முதல் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வசிக்கும் அரசு, தனியார் நிறுவன அதிகாரிகள், கூலித் தொழிலாளர்கள், கல்லுாரி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்று பொங்கல் பண்டிகையைக் கொண்டாட நேற்று கார், பஸ், வேன், ஆட்டோ, பைக் என தங்களது வாகனங்களில் தென் மாவட்டங்களுக்குச் செல்ல துவங்கினர்.
விக்கிரவாண்டி டோல் கேட்டில் நேற்று அதிகாலை முதல் சராசரியான போக்குவரத்து இருந்த நிலையில் மாலை வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கின.
இதனால் விக்கிரவாண்டி டோல் கேட்டில் தென் மாவட்டங்களை நோக்கி 7 முதல் 10 லேன்கள் திறக்கப்பட்டு வாகனங்கள்அனுமதிக்கப்பட்டது.
தற்போது, 98 சதவீத வாகனங்கள் பாஸ்டேக் வசதி பெற்றுள்ளதால் டோல் கேட்டில் விரைவாக கடந்து சென்றன.
நேற்று முன்தினம் நள்ளிரவு 12.00 முதல் நேற்று நள்ளிரவு 12:00 மணி வரை 45 ஆயிரம் வாகனங்கள் டோல் பிளாசாவைக் கடந்தன. இது சராசரி போக்குவரத்தான 23 ஆயிரத்தை விட கூடுதலாக 22 ஆயிரம் வாகனங்கள் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்றை விட இன்று போகிப் பண்டிகையன்றும் வாகனங்களின் போக்குவரத்து அதிகரித்து காணப்படும் என்பதால் எஸ்.பி., ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன், போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் குமாரராஜா மற்றும் டோல் கேட் ஊழியர்கள் போக்குவரத்து வாகனங்கள் தொய்வின்றி செல்ல கண்காணித்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.