ஆண், பெண், திருநங்கை என்ற வரிசைமுறை இன்று எல்லா இடத்திலும் உள்ளது. திருநங்கைகள் பலர் உயர் பதவிகள், பொறுப்புகள், சேவை, சுயதொழிலில் சாதிக்கவும் செய்கிறார்கள்.இவர்களை ஒருங்கிணைக்க, நல்வழி காட்ட அரசும், தன்னார்வ அமைப்புகளும் முனைப்பு காட்டுகிறது.
ஆனால் மதுரையில் சில திருநங்கைகள் சிக்னல்களில் யாசகம் கேட்கிறார்கள். இவர்களால் வாகன ஓட்டிகள் இடையூறுக்கு ஆளாகிறார்கள். இவர்களை தடுத்தால் 'திருநங்கை என உதாசீனம்செய்கிறீர்களா' என பிரச்னையை திசைதிருப்பி விடுவர் என்ற தயக்கம் வாகன ஓட்டிகளும், போலீசாருக்கும் உள்ளது.
திருநங்கைகளை திருத்துவதோடு, திருநங்கை போல் வேடமிடும் ஆண்களை போலீசார் கைது செய்ய வேண்டும். போலி திருநங்கைகள் பிச்சை எடுப்பதை தாண்டி வேறு குற்றச்செயல்களிலும் ஈடுபட அதிக வாய்ப்பு உண்டு. அதனால் போலீசார் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளை வைத்து யாசகம் கேட்கும் வடமாநில ஆண், பெண்களையும் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமூக ஆர்வலர் ராமகிருஷ்ணன் கூறியதாவது: மதுரையில் யாசகம் எடுப்பவர்கள் கிராமங்களில் அதிகம் தங்குகிறார்கள். கிராம தலைவர்களும் இவர்களை கண்காணிக்க வேண்டும். எங்கிருந்து வருகிறார்கள் என கண்டறிந்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தர வேண்டும். மதுரையில் கலெக்டர் வீரராகவராவ் இருந்த போது யாசகம் கேட்பவர்களை கட்டுப்படுத்த குழு உருவாக்கினார். குழு மூலம் கட்டுப்படுத்தி பிழைக்க வழி தேடி தரப்பட்டது. அந்த குழு தற்போது இல்லை.
குழந்தைகளுடன் யாசகம் கேட்கும் வடமாநிலத்தவர் குறித்து சமூக நலத்துறை கண்காணிக்க வேண்டும். திருநங்கைகளுக்கு மாவட்ட நிர்வாகம் இலவச சிறுதொழில் பயிற்சி கொடுத்து முன்னேற்ற வேண்டும், என்றார்.