மதுரை, -வெளிநாட்டு விமான நிறுவனங்கள் மதுரைக்கு நேரடி விமான சேவை அளிக்க வேண்டும் என மதுரை வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ரத்தினவேலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது: மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. பிற நாடுகளுடன் செய்துள்ள இரு நாட்டு விமானநிலைய சேவை ஒப்பந்தத்தில்' மதுரை விமான நிலையத்தைச் சேர்த்தால் தான் அந்நாட்டு விமான நிறுவனங்கள் மதுரைக்கு நேரடியாக விமான சேவை அளிக்க முடியும். துபாய், ஷார்ஜா, அபுதாபி, மலேசியா, சிங்கப்பூர், தோஹா நாட்டு விமான நிறுவனங்கள் மதுரைக்கு நேரடி சேவை துவக்க தயாராக உள்ளனர். நம்நாட்டில் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. மறுக்கப்படுவதற்கான காரணம் புரியவில்லை.
மதுரையிலிருந்து வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வோர் அதிகமாக உள்ளனர். ஆனாலும் போதிய விமானங்கள், விமானிகள் இல்லாத காரணத்தால் நம்நாட்டு விமான நிறுவனங்கள் மலேசியா, தோஹா, அபுதாபி, ஷார்ஜா, குவைத் நாடுகளுக்கு விமானசேவை அளிக்க முன்வரவில்லை. மதுரை விமான நிலையத்தின் முன்னேற்றம் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகிறது. இதனால் தென்மாவட்ட தொழில், பொருளாதார வளர்ச்சி தேக்க நிலையிலேயே உள்ளது.
இந்நிலை நீடித்தால் விமானங்கள் வரும் போது இரவுநேர ஷிப்ட் ரத்து செய்யப்பட்டு விடும். பிறநாடுகளுடனான விமான சேவை ஒப்பந்தத்தில் மதுரை விமானநிலையத்தை மத்திய விமான போக்குவரத்து துறை சேர்க்க வேண்டும். தமிழக அரசு மத்திய அரசுக்கு இவ்விஷயத்தில் அழுத்தம் தரவேண்டும் என்றார்.