அலங்காநல்லுார்,- --பாலமேடு, அலங்காநல்லுாரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் முறையே ஜன.,16, 17ல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் மூர்த்தி நேற்று ஆய்வு செய்தார். பாதுகாப்பு தடுப்பு வேலிகள், காளைகளை வாடிவாசலுக்கு அழைத்து வரும் வழி, பார்வையாளர் அமரும் காலரி அமைத்தல் உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
அமைச்சர் கூறியதாவது: உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லுார், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்ந்து 15 ஆண்டுகளாக அரசு விழாவாக நடத்தப்படுகிறது.
இம்முறை ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் முன்கூட்டியே துவங்கி கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் தென்மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க், டி.ஐ.ஜி., பொன்னி, எஸ்.பி.,சிவபிரசாத் ஆகியோர் பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகளை அனைத்து துறையினரும் சிறப்பாக செய்து வருகின்றனர்.
இதுவரை இல்லாத அளவிற்கு கட்டுப்பாடுடனும், பாதுகாப்புடனும் 3 ஊர்களிலும் வெகு சிறப்பாக போட்டி நடைபெறும். பரிசுகளும் கடந்த ஆண்டைவிட சிறப்பாக வழங்கப்படும். முதல்வர் ஸ்டாலின் ஆலோசனைப்படி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி கலந்து கொள்கிறார். பல்வேறு கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர், என்றார்.
விழா குழுவினர் ரகுபதி, கோவிந்தராஜ், பேரூராட்சி தலைவர்கள் ரேணுகா ஈஸ்வரி, சுமதி பாண்டியராஜன், செயல் அலுவலர்கள் ஜூலான் பானு,தேவி, பாலமேடு பொது மகாலிங்கசுவாமி மடத்து கமிட்டி நிர்வாகிகள் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.