கம்பம்,- -ஏலத்தோட்டங்களில் பெய்யும் உறைபனி, வெயில் காரணமாக ஏலக்காய் சிறுத்து, உதிர துவங்கி உள்ளது. இதனை தடுக்க ஆலோசனை வழங்கி உள்ளனர்.
இடுக்கி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடியாகிறது. வாசனையும், அதிக மருத்துவ குணங்களையும் கொண்ட ஏலக்காய்க்கு கட்டுபடியாகாத விலை கிடைத்து வருகிறது. மகசூல் பாதிப்பும் 40 சதவீதம் வரை இருக்கும் என்கின்றனர்.
பொதுவாக நவம்பர் இறுதியிலிருந்து பனி துவங்கி விடும்.டிசம்பரில் கடும் பனி நிலவும். ஆனால் தற்போது உறைபனி நிலவி வருகிறது. அதே சமயம் பகல் நேரங்களில் அதிகபட்ச வெயில் அடிக்கிறது. பனியால் ஏலக்காய் சிறுத்து போகும். கடும் வெயிலால் காய்கள் செடிகளில் இருந்து உதிர துவங்குகிறது.
இதை தடுக்க என்ன செய்ய வேண்டும் என ஏலக்காய் தொழில்நுட்ப ஆலோசகர்கள் அன்பழகன், பாண்டியராசன் கூறியிருப்பதாவது: விலை கிடைக்காத நிலையில் உறை பனி, கடும் வெயிலால் ஏலக்காய் சிறுத்து 70 சதவீதம் உதிரும். அவ்வாறு நிகழாமல் தடுக்க நுண்ணுாட்ட சத்துக்களான மக்னீசியம், கால்சியம், போரான், துத்தம் போன்றவற்றை தெளிக்க வேண்டும். அவ்வாறு தெளிப்பதால் கூடுதல் பலம் கிடைக்கும் என்றார்.