ஆண்டிபட்டி,--ஆண்டிபட்டி ஒன்றியம் திம்மரசநாயக்கனுார் ஊராட்சி மல்லையாபுரத்தில் கழிப்பறை, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் தவிக்கின்றனர்.
இந்த ஊராட்சியில் திம்மரசநாயக்கனூர், டி.பொம்மிநாயக்கன்பட்டி, மல்லையாபுரம் கிராமங்கள் உள்ளடங்கியுள்ளன.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட மல்லையாபுரத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. சேதமடைந்த வடிகால், சிமென்ட்ரோடு, சுகாதாரமில்லாத நிலையால் மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. பல ஆண்டுகளாக இக் கிராமத்திற்கு பஸ் வசதி இல்லை.
2 கி.மீ. தூரம் நடந்து சென்று மக்கள் பஸ்சில் செல்கின்றனர். ஆண்டிபட்டியில் இருந்து மல்லையாபுரம் வழியாக இயக்க வேண்டிய டவுன் பஸ்சை திம்மரசநாயக்கனுாரில் நிறுத்தி விடுகின்றனர்.
அடிப்படை பிரச்னைகளை தீர்க்க கோரி ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை எடுத்துச் சொல்லியும் எந்த நடவடிக்கை இல்லை என்று பொதுமக்கள் புலம்புகின்றனர். கிராமத்தின் பிரச்னைகள் குறித்து மக்கள் கூறியதாவது:
கழிவுநீர் வடிகால் வசதி இல்லை
ஏ.ராமுத்தாய், மல்லையாபுரம்:மல்லையாபுரத்தில் உள்ள 500க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வடிந்து செல்ல வழி இன்றி ஆங்காங்கே தேங்கி கொசு தொல்லை அதிகமாகிறது. கிராமத்திற்கு வரும் சுகாதார பணியாளர்கள் வீடுகளில் குடிநீர் தொட்டி, தண்ணீர் வைத்திருக்கும் பாத்திரங்களை மட்டும் பார்வையிட்டு செல்கின்றனர்.
கிராமம் முழுவதும் தேங்கியுள்ள கழிவு நீர் குறித்து அக்கறை கொள்வதில்லை. கடந்த ஆண்டு இப்பகுதியில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டது.
இந்த ஆண்டிலும் ஒரு குழந்தைக்கு டெங்கு பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது.
டெங்கு பாதிப்பு உறுதியானதும் வீடுகள் சுகாதார பணியாளர்கள் தோறும் சோதனைக்கு வருகின்றனர். கொசுவை கட்டுப்படுத்தும் நடவடிக்கை தான் இல்லை.
பொது கழிப்பறை தேவை
டி.முத்தையா, மல்லையா புரம்: இக் கிராமத்தில் பொதுக்கழிப்பறையும், வீடுகளில் தனிநபர் கழிப்பறை இல்லாதவர்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் கிராமத்தில் சுகாதாரம் பாதிக்கிறது. வாரம் இருமுறை குடிநீர் வினியோகம் உள்ளது. கூடுதல் தேவைக்கு போர்வெல் நீரை பயன்படுத்துகிறோம்.
துாய்மை பணியாளர்கள் வருவது இல்லை.
மழைக்காலத்தில் மழை நீருடன் கழிவு நீர் சேர்ந்து குடியிருப்புகளை சுற்றி தேங்குகிறது. இதனை கடத்தி விட வழி இல்லை. கிராமத்தில் சேரும் குப்பையை ஒரு இடத்தில் குவித்து விடுகின்றனர்.
அதனை அப்புறப்படுத்தும் நடவடிக்கையும் இல்லை. குப்பையில் தீ வைத்து செல்வதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. விநாயகர் கோயில் அருகில் பயன்பாடு இல்லாத கிணறுக்கு பாதுகாப்பு மேல் மூடி அமைக்க பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. குடியிருப்பு அருகே உள்ள கிணறு ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
இடம் வழங்கினால் கழிப்பறை வசதிக்கு தயார்
எம்.அக்க்ஷயா, ஊராட்சி தலைவர், திம்மரச்சநாயக்கனுார்: கிராமத்தில் துாய்மை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லை. வடிகால் அமைப்பதற்கு நிதி ஆதாரம் இல்லை. கிராமத்தின் நுழைவு பகுதியில் உள்ள ஓடை வழியாக கழிவு நீர், மழை நீர் வெளியேறி வந்தது. இப்பகுதியில் தற்போது ரூ.27 லட்சம் மதிப்பில் பாலம் கட்டும் பணியும் நடந்து வருகிறது.
பொது கழிப்பறை அமைக்க இட வசதி இல்லை. தன்னார்வலர்கள் இடம் வழங்கினால் கழிப்பறை கட்ட உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். பல ஆண்டுகளுக்குப் பின் சமீபத்தில்தான் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சுடுகாடு எரியூட்டு கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது.
மல்லையாபுரத்திற்கு அரசு டவுன் பஸ் வந்து செல்ல மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என்றார்.