பெரியகுளம் வடுகபட்டி ரோட்டில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஐம்பது ஆண்டுகளாக செயல்படுகிறது. இங்கு ஒரு டாக்டர், 7 நர்சுகள் பணியில் உள்ளனர். நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டில் இருந்து தினமும் ஏராளமான கர்ப்பிணிகள் தடுப்பூசி செலுத்தி கொள்வது, மாணவர்களுக்கு பரிசோதனை, தடுப்பூசி செலுத்துதல் போன்ற பணிகள் இங்கு அதிகம் நடைபெறும்.
நகருக்கு மத்தியில் இம் மருந்துவமனை உள்ளதால் கர்ப்பிணிகள பலரும் இங்கு பிரசவம் பார்க்க விரும்புவர். தற்போது மாதம் 15 முதல் 20 சுகப்பிரசவங்கள் இங்கு நடந்தது.
கடந்த 6 மாதங்களுக்கு முன் தேசிய நகர்ப்புற நல வாழ்வு குடும்ப திட்டத்தின் கீழ் இங்கு வெளி நோயாளிகளுக்கான கூடுதல் மருத்துவ கட்டடம் ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் பணி துவங்கியது.
இதில் பிரசவம் அறையும் புதுப்பிக்கும் பணி நடந்தது.
இப் பணிகள் நான்கு மாதங்களில் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. கடந்த ஜூலை முதல் கட்டுமான பணி துவங்கியதால் பிரசவத்திற்கு வரும் கர்ப்பிணிகள் பிற அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர்.
கட்டுமான பணிகள் கடந்த ஆறு மாதங்களில் 20 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளது. மீதி பணிகள் அரைகுறையாக உள்ளன.
டாக்டர் சாந்தி மற்றும் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து பயிற்சி டாக்டர்கள் சுழற்சி முறையில் வந்து செல்கின்றனர். தற்போது பிரசவம் நடக்காததால் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி மட்டுமே வழங்கப்படுகிறது. இங்கு காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பணி நேரம். இந்த பணி நேரம் குறித்த விபரங்கள் கூட இல்லாததால் சிகிச்சைக்கு வருபவர்கள் எப்போது டாக்டர் வருவார் என அறிய முடியாமல் சிரமப்படுகின்றனர். விரைவில் கட்டுமான பணி நிறைவு செய்து பிரசவ அறைக்கு பரிசோதனை சான்றுகள் வழங்கி விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரியுள்ளனர்.
Advertisement