ரிஷிவந்தியம், : அத்தியூர் கிராமத்தில் இன்று 14ம் தேதி சிறப்பு வார சந்தை நடக்கிறது.
ரிஷிவந்தியம் அடுத்த அத்தியூர் கிராமத்தில் வாரம் தோறும் செவ்வாய்கிழமை வார சந்தை நடைபெறுவது வழக்கம். சந்தையில் அதிகாலையில் ஆடு விற்பனையும், மாலை நேரங்களில் காய்கறி விற்பனையும் நடைபெறும்.
கள்ளக்குறிச்சி மட்டுமின்றி விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள், கால்நடை விற்பனையாளர்கள் அத்தியூர் சந்தைக்கு வந்து தங்களது கால்நடைகளை விற்பனை செய்வர்.
அதேபோல், உள்ளூர் இறைச்சி கடைக்காரர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று ஆடுகளை வாங்கி செல்வர்.
சாதாரண நாட்களில் 50 லட்சம் ரூபாய் வரையிலும், பண்டிகை நாட்களில் கோடி ரூபாய்க்கு அதிகமாகவும் வர்த்தகம் நடைபெறும் முக்கிய சந்தையாக உள்ளது.
இந்நிலையில் வரும் செவ்வாய்கிழமை 17ம் தேதி கரிநாள் என்பதால், எதிர்பார்த்த விற்பனை இருக்காது. இதையொட்டி இன்று 14ம் தேதி சனிக்கிழமை அத்தியூரில் சிறப்பு வார சந்தை நடைபெற உள்ளது.