செம்பட்டி--''பதவிக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் ஊராட்சிகளில் எவ்வித மேம்பாட்டு பணிகளும் நடக்கவில்லை,''என, ஆத்துார் ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் வேதனை தெரிவித்தனர்.
ஆத்துார் ஒன்றிய கவுன்சில் கூட்டம் தலைவர் மகேஸ்வரி (தி.மு.க.,) தலைமையில் நடந்தது. பி.டி.ஓ., ஏழுமலையான், துணைத் தலைவர் மகேஸ்வரி(தி.மு.க.,) முன்னிலை வகித்தனர். அலுவலக மேலாளர் முருகன் வரவேற்றார். கவுன்சிலர்கள் விவாதம்:
காணிக்கைசாமி(தி.மு.க.,): எஸ்.பாறைப்பட்டியில் 4 வழிச்சாலை பணி காரணமாக 4 மாதமாக குடிநீர் விநியோகம் இல்லை. கெண்டையம்பட்டி-வண்ணம்பட்டி ரோடு சீரமைப்பை பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாததால் 500 மீட்டர் துாரத்தை 5 கிலோமீட்டர் துாரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளது.ரூ. 25 லட்சம் ஒதுக்கியதாக தெரிவித்த போதும் பணி நடக்கவில்லை.
முருகன் (அலுவலக மேலாளர்): ரோடு சீரமைப்பு பணிக்கு ஓரிரு நாட்களில் நிர்வாக ஒப்புதல் கிடைத்துவிடும்.
சாதிக்(தி.மு.க.,): பதவிக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் ஊராட்சிகளில் எவ்வித வளர்ச்சிப் பணியும் மேற்கொள்ளவில்லை. ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் மூலம் எஞ்சிய சில மாதங்களிலாவது அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைவர்: கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும்.
ஆனந்தன் (அ.தி.மு.க.,): அக்கரைப்பட்டி ஊராட்சியில் தனியார் இடையூறு காரணமாக ரோடு பணி தடைபட்டுள்ளது. சர்ச்சைக்குரிய 25 சென்ட் இடத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகன்: வருவாய்த்துறை பெயரில் வழங்கப்பட்டுள்ள இடத்தை மீட்க வளர்ச்சித் துறை எந்த வகையிலும் நடவடிக்கை எடுக்க முடியாது.
டி.டி.ஓ.,: தனி தாசில்தார் பெயரில் வழங்கப்பட்டுள்ள பத்திர நகலை பெற்று தந்தால் துறை ரீதியாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கலாம்.
*ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர், விளையாட்டு துறை அமைச்சருக்கு வாழ்த்து தெரிவிப்பது, செலவினங்களுக்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.