பொங்கல் பண்டிகையொட்டி திண்டுக்கல் சுற்றுப்பகுதிகளில் பயிரிட்டுள்ள கரும்புகளை வாங்க வியாபாரிகள் வராததால் அவற்றை அறுவடை செய்யாமல் வியாபாரிகளை எதிர்பார்த்து நெடுநாளாக காத்திருந்தனர்.
இதனிடையே தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் கரும்பு வழங்க அதிகாரிகள் விவசாயிகளிடம் ரூ.23க்கு கேட்ட நிலையில் விலை கட்டுப்படி ஆகாத விவசாயிகள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று வரை இதனை வாங்க வியாபாரிகள் வருவார்கள் என விவசாயிகள் காத்திருந்தனர்.வராததால் , விளைச்சலில் பாதிப்பு ஏற்படவில்லையென்றாலும் விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதே என வேதனை தெரிவித்த விவசாயிகள் , இன்று ஜன.14 இறுதி நாளாக இருப்பதால் கரும்புகளை அவர்களே அறுவடை செய்து நகர்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
எங்கள் பிழைப்பே ஒரு நாள்தான்
கணேசன், விவசாயி,செட்டிநாயக்கன்பட்டி: செட்டிநாயக்கன் பட்டியில் ஒரு ஏக்கருக்கு மேல் கரும்பு சாகுபடி செய்துள்ளேன்.பொங்கல் பண்டிகை நெருங்கியதால் நேற்று அறுவடையில் ஈடுபட்டுள்ளோம். 10 மாதமாக பாதுகாப்பாக வளர்த்த கரும்புகளை அறுவடை செய்யும் நேரத்தில் வியாபாரிகள் வராததால் வேதனை தருகிறது . ஒரு நாள் கூத்தாக எங்கள் பிழைப்பு உள்ளது.இந்தாண்டு விளைச்சலில் பாதிப்பு இல்லை என்றாலும் வியாபாரிகள் வராதது வேதனை அளிக்கிறது .