கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி நகரைச் சுற்றிலும் ரிங் ரோடு மற்றும் சாலைகள் சீரமைப்பு பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டசபையில் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில்குமார் பேசியதாவது:
கள்ளக்குறிச்சி நகரைச் சுற்றிலும் ரிங் ரோடு அமைக்கப்படும் என்று அப்போதைய முதல்வர் பழனிசாமி கடந்த 2019ம் ஆண்டு அறிவித்து, ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
நாளுக்கு நாள் மக்கள் தொகை மற்றும் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. கரும்பு வாகனங்கள் கள்ளக்குறிச்சி நகரைக் கடந்து செல்வதால் இட நெருக்கடி மற்றும் நெரிசல் ஏற்படுகிறது. எனவே, ரிங் ரோடு பணிகளை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல், கள்ளக்குறிச்சி பஸ் நிலையம், தியாகதுருகம் செல்லும் சாலை, சின்னசேலம் செல்லும் சாலை தேசிய நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இதனால் 2 சாலைகளிலும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. இவை கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சருக்கும் நன்கு தெரியும். நாளுக்கு நாள் சாலை மிகவும் மோசமடைந்து வருவதுடன், மழைக் காலங்களில் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, நகரைச் சுற்றிலும் ரிங் ரோடு பணிகள் மற்றும் சாலைகள் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை வேண்டும்.
இவ்வாறு செந்தில்குமார் எம்.எல்.ஏ., பேசினார்.