பழநி,-பழநி நகராட்சி கூட்டத்தில் நகரில் தினமும் 54 டன் குப்பை அகற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இக் கூட்டம் தலைவர் உமாமகேஸ்வரி தி.மு.க.,) தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் கந்தசாமி (மார்க்சிஸ்ட்) நகராட்சி கமிஷனர் கமலா, நகராட்சி பொறியாளர் வெற்றிச்செல்வி முன்னிலை வகித்தனர்.
கவுன்சிலர்கள் விவாதம் :
சுரேஷ் (தி.மு.க.,): பழநி பகுதி சோலார் மின் இணைப்புகள் நகராட்சி சார்பில் உள்ளதா.ஜிகா பைப் லைன் மூலம் வழங்கப்படும் தண்ணீர் அனைத்து வீடுகளுக்கும் சரிவர செல்வதில்லை.
தலைவர்: ஜிகாபைப் பிரச்னைகளை சரி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படும்.
பொறியாளர்: பழநி பகுதியில் சோலார் மின் இணைப்பு நகராட்சி மூலம் இயங்கவில்லை அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
சுரேஷ் (தி.மு.க.,): நகராட்சி பகுதியில் கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும்.
தலைவர் : கண்காணிப்பு கேமிரா பொருத்தி பராமரிப்பு செய்வதில் திட்டமிட வேண்டும்.
பத்மினிமுருகானந்தம் (காங்.,): பழனி முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் நகராட்சி சார்பில் எல்.இ.டி., டிவிக்கள் வைக்க வேண்டும். அலங்கார வளைவுகள் வைக்க வேண்டும்.
தலைவர் : எல்.இ.டி. டிவி க்கள் கோயில் நிர்வாகத்தின் சார்பில் வைக்கப்பட உள்ளன.
விமலபாண்டியன் (தி.மு.க.,): நகராட்சி கூட்டத்தில் முதலில் ரூ. ஐந்து லட்சம் வேலைகள், அதன் பின் மீண்டும் ரூ. ஐந்து லட்சம் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் எந்த அளவில் நடைபெற்று வருகிறது.ரூ. ஒரு கோடி மதிப்பிலான கட்டடங்கள் பயனற்று உள்ளன. வார்டில் அங்கன்வாடி மையம் சேதமடைந்துள்ளது. தைப்பூச பணிக்காக செலவிடப்பட உள்ள ரூ. 40 லட்சம் பெறப்பட்டு உள்ளதா.
மனோஜ் குமார் (நகர்நல அலுவலர்) : இதுவரை கோயிலில் இருந்து நிலுவைத் தொகை ரூ.1.8 கோடி பெறப்பட்டுள்ளது. தற்போதைய செலவுக்கான தொகை, வேலை செய்த பின் கோயில் நிர்வாகத்திடம் பெறப்படும்.
விமலா பாண்டியன் (தி.மு.க.,): நகராட்சி கவுன்சிலர்களுக்கும் நகராட்சி நிர்வாகத்திற்கும் வெளிப்படை தன்மை இல்லை.
தலைவர் : நகராட்சி நிர்வாகத்தில் உள்ள பணிகள் குறித்து விவாதிக்க மன்ற கூட்டம் நடைபெறுகிறது.
தீனதயாளன் (தி.மு.க.,): கோயில் நிலத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களுக்கு வரி விதிக்கப்படுவது போல் அண்ணா செட்டி மடத்தில் குடியிருப்பு பகுதிக்கும் வரிவிதிப்பு வேண்டும்.
தலைவர்: அண்ணா செட்டி மடப்பகுதிக்கு வரிவிதிப்பு செய்ய வருவாய் துறையினர் தடையில்லாச் சான்று வழங்க வேண்டும்.
செபாஸ்டின் (தி.மு.க.,): பழநியில் துப்புரவு பணியில் ஈடுபடும் ஒப்பந்த பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளதா?
தலைவர்: ஒப்பந்த பணியாளர்கள் தேவை குறித்து அறியப்படும்.
செபாஸ்டின் (தி.மு.க.,): தினமும் நகராட்சி பகுதியில் எத்தனை லாரிகள் மூலம் குப்பை அகற்றப்படுகிறது.
நகர் நல அலுவலர் : பழநியில் தற்போது பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் 54 டன் குப்பை சேருகின்றன. இவற்றை தினமும் அகற்றி வருகிறோம் நகராட்சியிடம் 4 லாரிகள் 7 சரக்கு வாகனங்கள் உள்ளன.
செபாஸ்டின் (தி.மு.க.,): தேவை அதிகரித்தால் வாடகைக்கு ஒப்பந்த புள்ளி மூலம் லாரிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.