விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 13 ஒன்றியங்களைச் சேர்ந்த 464 பயனாளிகளுக்கு 120.77 லட்சம் ரூபாய் நிதி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித்துறை சார்பில், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில், தேர்வான பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆணையினை கலெக்டர் மோகன் வழங்கினார்.
அப்போது அவர் கூறுகையில், 'மாவட்டத்தில் கடந்த 2016-17 முதல் 2021-22ம் ஆண்டுகள் வரை, அரசு சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்த வீடுகள் 73 ஆயிரத்து 357 ஆகும். இதில் 72 ஆயிரத்த 952 வீடுகள் கட்டுவதற்கு ஆணைகள் வழங்கப்பட்டு, 38 ஆயிரத்து 532 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 34 ஆயிரத்து 420 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கட்டுமானப் பணிக்குத் தேவையான உதவிகள், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் பட்டியலின மக்கள் அதிகம் வறுமை கோட்டிற்கு கீழ் வசித்து வருகிறார்கள். அவர்களது வாழ்வாதாரத்திற்கும், வீடுகள் இல்லாத சமுதாயத்தினை உருவாக்குவதற்காகவும், வீடு கட்டும் திட்டத்தில் வீடுகள் வழங்கப்பட்டு குடிசைகள் இல்லாத மாவட்டமாக மாறி வருகிறது.
நிலுவையில் உள்ள வீடுகள், பணிகள் துவங்கப்படாத மற்றும் முதல் தவணை தொகை விடுவிக்கப்படாத பயனாளிகளைக் கண்டறிந்து, செயல்படுத்திட வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
முதல் தவணை தொகை 26,029 ரூபாய் வீதம் 13 ஒன்றியங்களைச் சார்ந்த 464 பயனாளிகளுக்கு, 120.77 லட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது' என்றார்.
கூடுதல் கலெக்டர் சித்ரா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.