விழுப்புரம் : அரசு வேலை வாங்கித் தருவதாக 16 லட்சம் ரூபாய் மோசடி செய்த திண்டிவனம் முன்னாள் நகர மன்ற துணைத் தலைவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம், சாலாமேட்டைச் சேர்ந்தவர் பழனிவேலு, 60; இவர், விழுப்புரம் மாவட்ட குற்றப் பிரிவு போலிசில், திண்டிவனம் சஞ்சீவிராயன்பேட்டையைச் சேர்ந்த முகமது ஷெரீப், 45; மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த டி.கீரனுாரைச் சேர்ந்த அப்துல் ஜாபர் ஆகியோர் தனது மகள்களுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக 16 லட்சம் ரூபாய் வாங்கினர்.
ஆனால், வேலை வாங்கித் தராமலும், பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியதாக புகார் அளித்தார்.
அதன் பேரில், முகமது ஷெரீப் மற்றும் அப்துல் ஜாபர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து, நேற்று முகமது ஷெரீப் கைது செய்யப்பட்டார்.
முகமது ஷெரீப் திண்டிவனம் நகர மன்ற துணைத் தலைவராகவும், அ.தி.மு.க., முன்னாள் விழுப்புரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராகவும் இருந்தார்.
சில மாதங்களுக்கு முன் அ.தி.மு.க.,வில் இருந்து விலகி சசிகலா அணியில் இணைந்த முகமது ஷெரீப் தற்போது விழுப்புரம் மாவட்ட ஜெ., பேரவை இணைச் செயலாளராக உள்ளார்.