ஒட்டன்சத்திரம்,--''தென்னை உற்பத்தியில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது'' என விருப்பாச்சியில் நடந்த தென்னை வளர்ச்சி வாரிய நிறுவன விழாவில் கள அலுவலர் முருகானந்தம் பேசினார்.
விருப்பாச்சியில் தென்னை வளர்ச்சி வாரியத்தின் நிறுவன தின விழா வட்டார அளவிலான தென்னை சாகுபடி,மதிப்பு கூட்டுதல் ,மரம் ஏறும் தொழிலாளர்களுக்கான ஆயுள் காப்பீட்டு திட்டம் பதிவு செய்தல் குறித்த கருத்தரங்கத்தில் அவர் பேசியதாவது:
உலகில் 92 நாடுகளில் தென்னை மரம் விவசாயம் செய்யப்படுகிறது.உற்பத்தி திறன்,உற்பத்தியில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.ஒரு மரத்தில் 150 காய்கள் காய்ப்பது இந்தியாவில் மட்டுமே.மற்ற நாடுகளில் 60 காய்கள் மட்டுமே காய்க்கிறது.இந்திய அளவில் தமிழகம் தென்னை உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.ஒருகேரளாவில் பரப்பளவு அதிகமாக இருந்த போதிலும் ஒரு மரத்திற்கு 34 காய்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது, என்றார்.
சென்னை மண்டலத்தின் முதன்மை கள அலுவலர் பரமசிவம் பேசியதாவது:தென்னை வளர்ச்சி வாரியம் தென்னை மரங்களுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துகிறது.
வயதின் அடிப்படையில் மரங்களை 2பிரிவுகளாக பிரித்துள்ளோம்.4லிருந்து 15 வயதுடைய மரங்களுக்கு ரூ.7 பிரீமியம் செலுத்த வேண்டும். 50 சதவீத பிரீமியத்தை தென்னை வளர்ச்சி வாரியம் 25 சதவீதம் தமிழ்நாடு வேளாண் துறை செலுத்தும்.மீதி 25 சதவீதத்தை மட்டும் விவசாயிகள் செலுத்த வேண்டும்.இழப்பீட்டுத் தொகையாக மரம் ஒன்று ரூ. 900 பெறலாம்.16லிருந்து 60 வயதுடைய மரங்களுக்கு பிரீமியம் ரூ. 14 ஆகும்.50 சதவீதம் தென்னை வாரியம், 25 சதவீதம் தமிழ்நாடு வேளாண் துறை,மீதி 25 சதவீதம் விவசாயிகள் செலுத்த வேண்டும்.
இழப்பீட்டுத் தொகையாக மரம் ஒன்றுக்கு ரூ.1900 பெறலாம்,என்றார்.
உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார். விருப்பாச்சி ஊர் தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். ஒட்டன்சத்திரம் உதவி வேளாண்மை இயக்குனர் ஜெயலட்சுமி, உதவி வேளாண்மை அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தனர்.வேடசந்துார் எஸ்.ஆர்.எஸ்., வேளாண்மை,தொழில்நுட்பக் கல்லுாரி மாணவர்கள் சேராஜ்குமார், சக்தி நிவாஸ், ஸ்ரீதர், நரேஷ், சரண், நிவின், விபின், ராஜா, ரிஷாந்த், சரவணகுமார் பங்கேற்றனர்.