வானுார் : ஆரோவில் காவல் நிலையம் சார்பில், போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் போதைப் பொருட்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதும் அதிகரித்து வருகிறது.
இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும்படியும், பொதுமக்களிடம் போதைப் பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மாவட்ட போலீசாருக்கு எஸ்.பி., ஸ்ரீநாதா உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி நேற்று முன்தினம் ஆரோவில் காவல் நிலையம் சார்பில், பட்டானுார் சோதனைச்சாவடியில் பொது மக்கள் மத்தியில், போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சரவணன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதைப் பொருட்கள் விற்பனை செய்வோர் குறித்து தகவல் தெரிவிக்கும் படியும் போலீசார் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.