சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்; காதலன் உட்பட மூவர் கைது: கிரைம் ரவுண்ட் அப்| Girls gang-rape, three arrested including boyfriend: Crime Roundup | Dinamalar

 சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்; காதலன் உட்பட மூவர் கைது: கிரைம் ரவுண்ட் அப்

Updated : ஜன 14, 2023 | Added : ஜன 14, 2023 | கருத்துகள் (5) | |
சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் காதலன் உட்பட மூவர் கைதுதிண்டிவனம்: திண்டிவனம் அருகே நம்பி சென்ற சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த காதலன் உட்பட மூன்று பேரை போலீசார் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த வீரணாமூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் சிம்பு, 19; ஆட்டோ டிரைவர். சந்தைமேடு பகுதியில் ஆட்டோ ஓட்டி
Crime, Police, Murder, Arrest,சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் காதலன் உட்பட மூவர் கைது


திண்டிவனம்: திண்டிவனம் அருகே நம்பி சென்ற சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த காதலன் உட்பட மூன்று பேரை போலீசார் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த வீரணாமூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் சிம்பு, 19; ஆட்டோ டிரைவர். சந்தைமேடு பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

இவர், இரண்டு மாதங்களாக திண்டிவனம் அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்தார். திருமணம் செய்து கொள்வதாகக் கூறியதால் சிறுமி சிம்புவிடம் நெருங்கிப் பழகினார்.

சிம்பு தன் காதலியுடன் பழகிய அந்தரங்க விஷயத்தை தன் நண்பர்களான திண்டிவனம் அடுத்த பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் சிவா, 21; சேட்டு மகன் செல்வம், 19; ஆகியோரிடம் பகிர்ந்துள்ளார்.

இதனால் சிவாவும், செல்வமும், தாங்களும் அந்த சிறுமியுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என சிம்புவிடம் கேட்டுள்ளனர். அதற்கு சிம்புவும் ஒப்புக்கொண்டு நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு சிறுமியை வழக்கம் போல் தனியாக சந்திக்கலாம் எனக்கூறி தன் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு செஞ்சி ரோட்டில் உள்ள ராகவேந்திரா கார்டன் பின்புறம் மறைவிட பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு சிறுமியை மிரட்டி சிம்பு, சிவா, செல்வம் ஆகிய மூவரும் அடுத்தடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். நடந்த சம்பவம் குறித்து சிறுமி தன் பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசில் நேற்று காலை சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

சிம்பு, சிவா, செல்வம் ஆகிய மூவர் மீதும் போக்சோ நம்பிக்கை மோசடி கொலை மிரட்டல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்தனர்.

சிறுமிக்கு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் திண்டிவனத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஹங்கேரியில் கத்தியால் குத்தி போலீஸ் அதிகாரி கொலை


புடாபெஸ்ட்: ஹங்கேரியில் கத்தி யால் குத்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மூவரில், பலத்த காயம் அடைந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஐரோப்பிய நாடான ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டின் கதவை உடைத்து, மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைய முயற்சிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனே, சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அந்த நபரை பிடிக்க முயற்சித்தனர். ஆனால், அவர் போலீஸ் அதிகாரிகள் மூவரையும் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினார்.

இதையடுத்து, போலீசார் அவரை எச்சரிக்கும் விதமாக வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ஆனால், அதையும் மீறி அந்த நபர் ஓடியதால், அவர் காலில் சுட்டனர். பின், அவரைப் பிடித்து, கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்த போலீசாருடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், அங்கு பலத்த காயமடைந்த ௨௯ வயது போலீஸ் அதிகாரி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக, ஹங்கேரி போலீஸ் தரப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது.


கல்லுாரி மாணவி கூட்டு பலாத்காரம் காஞ்சிபுரம் கொடூர சம்பவத்தில் 5 பேர் கைதுகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தனியார் பள்ளி அருகே, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில், இரவு நேரத்தில், கல்லுாரி மாணவர் கண்முன், மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் தொடர்பாக, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, 20 வயது மாணவர், ஏனாத்துார் பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில், இளங்கலை மூன்றாம் ஆண்டு படிக்கிறார். அதே கல்லுாரியில், 20 வயது மாணவியும், வேறொரு பாடப்பிரிவில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படிக்கிறார்.


ஆள்நடமாட்டம் இருக்காது


இருவரும் காதலித்து வருகின்றனர். இருவரும், அடிக்கடி காஞ்சிபுரம் அருகே, குண்டுகுளம் என்ற பகுதியில், பெங்களூரு - புதுச்சேரி செல்லும் புறவழிச்சாலையில், தனியார் பள்ளி அருகே சந்தித்து வந்தனர்.

இவர்கள் சந்திப்பு நடத்தும் பகுதியில், ஆள்நடமாட்டம் இருக்காது. வீட்டுமனைகள் போடப்பட்டுள்ள இடம் அது.

பெரும்பாலும் இவர்கள் அந்த இடத்திற்கு, மாலை மற்றும் இரவு நேரத்தில், இரு சக்கர வாகனத்தில் சென்று வெகுநேரம் பேசுவதும், நெருக்கமாகவும் இருந்துள்ளனர்.

இதை அப்பகுதியைச் சேர்ந்த மர்ம நபர்கள் கண்காணித்துள்ளனர்.

காதலர்கள் சந்திப்பு நடத்திய பகுதி இருட்டாக இருக்கும் என்பதால், மர்ம நபர்கள் மது குடிப்பதும், விலை மாதுக்களை அழைத்து வந்து உல்லாசம் அனுபவிப்பதும் வாடிக்கை.

இவர்களின் பார்வை, இளம் காதலர்களின் நடவடிக்கை மீது திரும்பியது.


மிரட்டல்


வழக்கம் போல, அந்த இடத்தில், நேற்று முன்தினம் இரவு, 7:30 மணியளவில், மாணவனும் மாணவியும் சந்தித்து, மெய்மறந்த நிலையில் இருந்தனர்.

அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் மூவர், இளம் காதலர்களை சூழ்ந்தனர். 'நீ மட்டும் ஜாலியாக இருந்தால் போதுமா, நாங்களும் இருக்க வேண்டாமா?' என, மாணவனை மிரட்டினர். சத்தம் போட்டால் இருவரையும் கொன்று விடுவதாகவும் மிரட்டினர்.

இருவரும் காலில் விழுந்து கெஞ்சினர்; மர்ம நபர்கள் அதை காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை; மாணவனை தாக்கினர். மாணவரை ஒருவர் பிடித்துக் கொள்ள மற்ற இருவர், மாணவியின் கழுத்தில் கத்தியை வைத்து 'தரதர'வென மரத்தின் அருகே இழுத்துச் சென்று, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.

மொபைல் போன் வாயிலாக, 'விமல், சீக்கிரம் வாடா; சின்ன பொண்ணு ஒண்ணு மாட்டி இருக்கு' என அழைத்தனர். சற்று நேரத்தில் மேலும் இருவர் வந்தனர்.

மொத்தம் ஐந்து பேர், முகத்தில் 'மாஸ்க்' அணிந்த நிலையில், மாணவியை பலாத்காரம் செய்து தப்பினர்.


துருப்பு சீட்டு


இச்சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர், காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். டி.எஸ்.பி., ஜூலியஸ் சீசர் தலைமையிலான போலீசார் விசாரித்தனர்.

சம்பவ இடத்தில், மர்ம நபர்கள், விமல் என்ற பெயரை குறிப்பிட்டதையே துருப்பு சீட்டாக பயன்படுத்தி, விப்பேடு பகுதியைச் சேர்ந்த விமல், 25, என்பவரை பிடித்து விசாரித்தனர்.

இவர் அளித்த தகவலின்படி, விப்பேடு மற்றும் செவலிமேடு பகுதியைச் சேர்ந்த சிவகுமார், 20, மணிகண்டன், 22, விக்னேஷ், 25, தென்னரசு, 25, உட்பட, ஐந்து பேரை நேற்று கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இது நான்காவது சம்பவம்!

காஞ்சிபுரத்தில், 2019 ஏப்ரலில், 15 வயது சிறுமியை ஆட்டோவில் கடத்தி, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக, ஆட்டோ ஓட்டுனர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.பின், 2021 செப்டம்பரில், இளம்பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி, கீழ்கதிர்பூர் கிராமத்திற்கு அழைத்து சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.ஸ்ரீபெரும்புதுார் பகுதியில், தனியாகச் சென்ற இளம்பெண்ணை போலீஸ் எனக் கூறி, வடமங்கலம் செல்லும் சாலையில், இருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். நான்காவது சம்பவமாக, காஞ்சிபுரம் குண்டுகுளம் பகுதியில் நேற்று முன்தினம் கல்லுாரி மாணவியை, ஐந்து பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.
அராஜகத்தில் ஈடுபட்ட ரவுடிகள் கைது


வியாசர்பாடி : வியாசர்பாடி, பி.வி.காலனி, 1வது தெரு முதல் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, மூலக்கடை வரை, கடந்த 10ம் தேதி நள்ளிரவு, முகமூடி மற்றும் தலைக்கவசம் அணிந்து வந்த 10 பேர் கொண்ட கும்பல், அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார், தலா நான்கு 'டாடா ஏசி' வாகனங்கள், ஆட்டோக்களை அடித்து நொறுக்கினர். மேலும் ஜெராக்ஸ் கடை, இரு மளிகை கடைகளை சூறையாடினர்.


latest tamil news


அவ்வழியே வந்த, வியாசர்பாடி, பி.வி.காலனி, 1வது குறுக்கு தெருவைச் சேர்ந்த லோகநாதன், 32, புளியந்தோப்பு, நரசிம்மா நகர், 4வது தெருவைச் சேர்ந்த நவீன், 24, எம்.கே.பி.நகர், 19வது கிழக்கு குறுக்கு தெருவைச் சேர்ந்த கோபி, 48, கொடுங்கையூர், கவியரசு கண்ணதாசன் நகர், 7வது பிளாக்கைச் சேர்ந்த இம்ரான்கான், 32, அவரது மனைவி காயத்ரி, 28, வியாசர்பாடி, சாஸ்திரி நகர், 2வது தெருவை சேர்ந்த ஷாம், 23 ஆகியோரை சரமாரியாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் சரிந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த நிலையில், இம்ரான்கான் என்பவர் அரிசி வியாபாரம் செய்து வருகிறார். அவரிடம் இக்கும்பல் அடிக்கடி மது அருந்த மிரட்டி மாமூல் வாங்கி வந்துள்ளது. இந்த நிலையில் புது ஆண்டுக்கு மாமூல் கேட்டுள்ளனர். இம்ரான்கான் தர மறுத்ததால் வெட்டியது, எம்.கே.பி.நகர் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து, எம்.கே.பி.நகர் உதவி கமிஷனர் தமிழ்வாணன் தலைமையில் எம்.கே.பி.நகர், கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர்.

அதில் ரவுடிகளான வியாசர்பாடி, பி.வி.காலனி 15வது தெருவைச் சேர்ந்த அபிஷேக், 19, வியாசர்பாடி, மூர்த்திங்கர் நகர் நகர்ப்புற வாழ்வாதார குடியிருப்பைச் சேர்ந்த ஜீவா, 19, வியாசர்பாடி, அன்னை சத்யா முதல் தெருவைச் சேர்ந்த திலீப், 18, வியாசர்பாடி, வி.பி.காலனி, 20வது தெருவைச் சேர்ந்த முரளிதரன், 26, ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் நால்வரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான ஆறு பேரை தேடி வருகின்றனர்.


பரங்கிமலை சிறப்பு எஸ்.ஐ., கற்பழிப்பு வழக்கில் கைது


தாம்பரம் : சென்னை கோவிலம்பாக்கம், சுசிலா நகரைச் சேர்ந்தவர் ஷீபா, 37. சில நாட்களுக்கு முன், பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.


அதில் கூறியதாவது:


கடந்த 2021ம் ஆண்டு மரம் நடும் விழாவில், பரங்கிமலை ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ஆண்ட்ரூஸ் கார்டுவெல், 54, என்பவரை சந்தித்தேன்.

அப்போது, தாய் இறந்த மன அழுத்தத்தில் இருந்த என்னிடம், ஆண்ட்ரூஸ் கார்டுவெல் ஆறுதலாக பேசி, தனக்கு திருமணம் ஆகவில்லை எனக் கூறினார். பின், இருவரும் திருமணம் செய்யாமலேயே கணவன் - மனைவியாக வாழ்ந்தோம்.

அதன் பிறகே, ஆண்ட்ரூஸ் கார்டுவெல்லுக்கு திருமணமானது தெரிந்தது. அதனால், அவரை விட்டு விலக முடிவு செய்தேன். இதையறிந்த அவர், 'மார்பிங்' செய்த என்னுடைய அந்தரங்க புகைப்படங்களை காட்டி மிரட்டினார்.

இவ்வாறு புகாரில் கூறியிருந்தார்.

புகாரின்படி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்த நிலையில், ஆண்ட்ரூஸ் கார்டுவெல் தலைமறைவானார். பின், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்படி தனிப்படை அமைக்கப்பட்டு, ஆண்ட்ரூஸ் கார்டுவெல்லை தேடினர்.

இந்நிலையில், கோல்கட்டாவில் பதுங்கியிருந்த அவரை, தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

சென்னைக்கு அழைத்து வரப்பட்ட அவரிடம், சிட்லப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டது. பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.
3.5 கிலோ தங்கம் பறிமுதல் இருவர் கைது


கோவை : சார்ஜாவில் இருந்து கோவைக்கு சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் 3.5 கிலோ தங்கத்தை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர்.

சட்டவிரோதமாக தங்கம் கடத்தி வருவதாக, வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று சார்ஜாவில் இருந்து கோவை வந்த 'ஏர் அரேபியா' விமான பயணியர் ஆறு பேரிடம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அவர்கள் மறைத்து வைத்திருந்த, சுமார் 2.05 கோடி மதிப்புள்ள, 3.5 கிலோ வெளிநாட்டு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, தங்கம் கடத்தி வந்த மணிகண்டன், 32, இப்ராகிம், 20 ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


சிறுவன் ஓட்டிய கார் மோதி 2 மாணவியர் காயம்


ஸ்ரீபெரும்புதுார் : சோமங்கலம் அரசு பள்ளி மைதானத்தில் சிறுவன் ஓட்டிப்பழகிய கார் மோதி மாணவியர் இருவர் காயமடைந்தனர்.

ஸ்ரீபெரும்புதுார் அருகே சோமங்கலத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளி மைதானத்தை சுற்றி மதில் சுவர் உள்ளது.

நேற்று காலை 11.30 மணியளவில், 15 வயது சிறுவனுக்கு பள்ளி மைதானத்தின் உள்ளே சென்று கார் ஒட்டி பழகியுள்ளார். அப்போது பிளஸ் 1 மாணவர்கள் உடற்கல்வி வகுப்பு என்பதால் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தனர்.

அப்போது சிறுவன் ஓட்டிச் சென்ற கார் மோதியதில், 11 வகுப்பு மாணவியர் இருவர் காயமடைந்தனர். இதில் ஒரு மாணவிக்கு மயங்கி விழுந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் காயமடைந்த மாணவியரை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அழைத்து சென்று, சிகிச்சை அளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன், சோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.


விபச்சார மன்னன் 'சான்ட்ரோ' ரவி குஜராத்தில் கைது


அரசியல் புள்ளிகள், அதிகாரிகள், செல்வாக்கு மிக்க நபர்களுக்கு பெண்களை அனுப்பி விபச்சாரம் செய்து வந்த மைசூரை சேர்ந்த 'சான்ட்ரோ' ரவி குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் நேற்று கைது செய்யப்பட்டார். இதனால் அவருடன் தொடர்பில் இருந்த முக்கிய புள்ளிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.


latest tamil news

மைசூரு விஜயநகரை சேர்ந்த, 40 வயது பெண், தன் கணவர் மஞ்சுாத் எனும் 'சான்ட்ரோ' ரவி, 50, தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, உயிரை கொல்லும் நோய் பரப்பி, வரதட்சணை கொடுமை செய்வதாக இம்மாதம் 4ம் தேதி விஜயநகரா போலீசில் புகார் செய்தார். எப்.ஐ.ஆர்., பதிவானதும், 'சான்ட்ரோ' ரவி தலைமறைவானார். இதற்கிடையில், அவரது சுய ரூபம் தெரிய ஆரம்பித்தது.

* கார்களின் பெயர்

இவர், பிரபல அரசியல் புள்ளிகள், உயர் அதிகாரிகள், செல்வாக்கு மிக்க தலைவர்களுக்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பெண்கள் வரவழைத்து விபச்சாரம் நடத்தியுள்ள அதிர்ச்சி தகவல் வெளியானது. அதுவும் ஒவ்வொரு பெண்ணுக்கும் பிரபல கார்களின் பெயரை சூட்டி, வாடிக்கையாளர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளார்.

வேலை வாங்கி தருவதாக கூறி, பல பெண்களை ஏமாற்றி விபச்சாரத்தில் தள்ளியுள்ளார். முதல்வர் பசவராஜ் பொம்மை மகன் உட்பட பல்வேறு அரசியல் புள்ளிகளுடன் போட்டோ எடுத்து கொண்டு, தனக்கு செல்வாக்கு இருப்பதாக நாடகம் ஆடியுள்ளார்.

தன் செல்வாக்கை பயன்படுத்தி, அரசு அதிகாரிகளையும் இடமாற்றம் செய்து, பணம் பறித்துள்ளார். விலை உயர்ந்த கார்களை வாங்கி குவித்துள்ளார். இந்த தகவல் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


சிறப்பு படைகள்


இந்நிலையில், அவரை பிடிக்க மாண்டியா, ராம்நகர், மைசூரு, ராய்ச்சூர் மாவட்ட எஸ்.பி.,க்கள் தலைமையில் மூன்று சிறப்பு படைகள் அமைக்கப்பட்டன. கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா, தமிழகம், கோவா உட்பட பல்வேறு மாநிலங்களில் தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கிடையில், 10 நாட்களுக்கு பின், குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் 'சான்ட்ரோ' ரவி நேற்று கைது செய்யப்பட்டார். அவரது கூட்டாளிகள் ராம்ஜி, 42, சதீஷ், 36, மதுசூதன், 40, ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.


மாறுவேடம்


இது குறித்து, மைசூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கர்நாடக சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., அலோக் குமார் நேற்று மாலை கூறியதாவது:

மந்த்ராலயா கோவிலுக்கு வந்த ரவியின் கூட்டாளி சேத்தன் என்பவர் இம்மாதம் 12ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணைப்படி, குஜராத் போலீஸ் உதவியுடன் ஆமதாபாத்தில் ரவியும், அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர். அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக, விக் எனும் செயற்கை முடியை எடுத்து விட்டு, மீசையையும் எடுத்துள்ளார்.

மேலும், தினமும் சிம் கார்டுகளை மாற்றியதால் அவரை கைது செய்ய தாமதமானது. அவரை கைது செய்து, கர்நாடக போலீஸ் மானத்தை காப்பாற்றியுள்ளனர். ஏற்கனவே அவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் 28 வழக்குகள் பதிவாகியுள்ளன. கிரிமினல் வழக்கு ஒன்றில், 2005ல் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, 11 மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார். கைது செய்த போலீசாருக்கு அரசு சார்பில் ரொக்க பரிசு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X