பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஆச்சிப்பட்டியில் பலுான் திருவிழா நேற்று துவங்கியது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் தமிழக சுற்றுலாத்துறை சார்பில் பலுான் திருவிழா நேற்று துவங்கியது. அதில் நெதர்லாந்து அமெரிக்கா, பிரேசில் கனடா உள்ளிட்ட எட்டு நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 12 வெப்ப பலுான்கள் பறக்கவிடப்பட்டன. தமிழக சுற்றுலாத்துறை சார்பில் ஒரு பலுான் பறக்கவிடப்பட்டது. மிக்கி மவுஸ், டைனோசர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களிலும் பலுான்கள் இருந்தன.
பலுான்களை பார்வையிட்ட கலெக்டர் சமீரன் கூறுகையில் ''பலுான் திருவிழாவில் கலாசாரம், பண்பாடு போன்றவற்றை விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. காற்றின் வேகம், சமதளம், இயற்கை சூழல் ஆகியவற்றை அடிப்படை ஆதாரமாக கொண்டு பொள்ளாச்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த திருவிழா வாயிலாக பொள்ளாச்சி பகுதி உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும்,'' என்றார்.