ஐகோர்ட் தடை உத்தரவை மீறி, செங்கல் சூளைகளிலிருந்து, 1500 லாரிகளில் சட்டவிரோதமாக செங்கல் எடுத்துச் செல்லப்பட்டு இருப்பதாக, கோவை கலெக்டரிடம் தடாகம் பள்ளத்தாக்கு பாதுகாப்புக்குழு புகார் தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பின் நிர்வாகிகள், கோவை கலெக்டரிடம் நேற்று நேரில் கொடுத்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: கோவை மாவட்டம், தடாகம் பகுதியில் அனுமதியின்றி இயங்கி வந்த செங்கல் சூளைகள் அனைத்தும், சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி, 2021 மார்ச் 19ல் மாவட்ட நிர்வாகத்தால், 'சீல்' வைத்து மூடப்பட்டன.
கலெக்டரின் உத்தரவை ரத்து செய்து, தமிழக கனிம வளத்துறை ஆணையர், கடந்த டிச.,29ல் வெளியிட்ட ஆணையில், 2 லட்சம் ரூபாய் அபராதத்தைச் செலுத்தி விட்டு, சூளைகளில் உள்ள செங்கல்களை எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளார்.
கடந்த 10ம் தேதி செங்கல் சூளைகள் தொடர்பான விசாரணை ஐகோர்ட்டில் வந்தபோது, ஆணையரின் உத்தரவுக்கு தடையுத்தரவு வழங்கப்பட்டதுடன், செங்கல் எடுத்தச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், செங்கல் சூளைகள் விதிமீறல் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன் வந்து பதிவு செய்த வழக்கின் விசாரணை, கடந்த 11ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஆணையரின் உத்தரவு பற்றி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. பிப்.,27க்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஐகோர்ட் உத்தரவுக்கு முன்பாக, கடந்த 2 முதல் 13ம் தேதி வரை, 1500 லாரிகளில் செங்கல் சூளைகளில் இருந்து சட்டவிரோதமாக செங்கல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. ஒவ்வொரு லாரியிலும் 4,500 செங்கல் எடுத்துச் சென்று, வெளியிடங்களில் விற்கப்பட்டுள்ளன.
சுணக்கம்
கடந்த 10ம் தேதி, ஐகோர்ட் தடை விதித்த பின்னும், தேசிய பசுமை தீர்ப்பாயம் எச்சரித்த பின்னும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சட்டவிரோதமாக இயங்கி வந்த செங்கல் சூளைகளின் அலுவலகங்கள், தொழிலாளர் குடியிருப்புகளின் மின் இணைப்புகளைத் துண்டிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததே, இதற்கு முக்கியக் காரணம்.
ஐகோர்ட் உத்தரவின்படி, இவற்றுக்கான மின் இணைப்புகளை உடனே துண்டிக்க வேண்டும்.
சட்டவிரோதமாக செங்கல் எடுத்துச் செல்லப்பட்டது தொடர்பாக, தடாகம் போலீஸ் ஸ்டேஷனில் சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ன. தடாகம் போலீசாரால் எட்டு இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில், காட்சிப்பதிவுகளைப் பார்த்தாலே செங்கல் கடத்தல் பற்றித் தெரியவரும்.

இவற்றை ஆய்வு செய்து, அந்தப் பதிவுகளை ஐகோர்ட் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மாவட்ட நிர்வாகம் சமர்ப்பிக்க வேண்டும். கடந்த 2021 மார்ச் 19ல், செங்கல் சூளைகளுக்கு சீல் வைக்கப்பட்ட பின், ஜன., 2 வரையிலுமான காலகட்டத்தில், தடாகம் பள்ளத்தாக்கிலிருந்த இயற்கை நீரோடைகள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியிருந்தன.
ஆனால் கடந்த 2ம் தேதிக்குப் பின், மீண்டும் லாரிகளில் செங்கல்களைக் கொண்டு செல்வதற்காக, இந்த ஓடை வழித்தடங்கள், போக்குவரத்துப் பாதையாக மாற்றப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.
-நமது சிறப்பு நிருபர்-