நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணப்பாளர் சீமான் அறிக்கை:
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை, 2025ம் ஆண்டுக்குள் தனியாருக்கு விற்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தனியாருக்கு தாரை வார்க்க போகும் நிறுவனத்திற்காக, தமிழ் மக்களின் நிலங்களை அடிமாட்டு விலைக்கு பறித்து ஒப்படைக்க, தமிழக அரசு அவசரம் காட்டுவது ஏன்? ஏற்கனவே நிலம் வழங்கிய குடும்பங்களுக்கு ஒப்பந்தப்படி பணி வழங்காமலும், பல்லாயிரக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யாமலும், இனப் பாகுபாடு கடைப்பிடிக்கிறது நெய்வேலி நிலக்கரி நிறுவனம்.

* ஒரு வேளை, இந்த ஒரு விஷயத்துலயாவது மத்திய அரசோட ஒத்துப்போகலாம்னு நினைச்சு, நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்துதோ?
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
'கண்களை ஸ்கேன் செய்து பொருட்கள் வழங்கும் முறை, விரைவில் அனைத்து ரேஷன் கடைகளிலும் அமல்படுத்தப்படும்' என, உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். 'காஸ் சிலிண்டர் மானியத்திற்கு ஆதார் கட்டாயம்' என, மத்திய அரசு அறிவித்த போது, 'மக்களை சிரமப்படுத்தக் கூடாது' என, ஸ்டாலின் கூறியது நினைவுக்கு வருகிறது.

'மக்களை சிரமப்படுத்தும் உரிமை, தி.மு.க., அரசுக்கு மட்டுமே உண்டு' என, முதல்வர் நினைக்கிறாரோ என்னவோ?
அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை:
சினிமா பார்ப்பதற்காக, எதை வேண்டுமானாலும் செய்யும் இளைஞர்களை பார்த்து, மனம் வேதனை அடைகிறது. உண்மையான கதாநாயகன்களை விடுத்து, போலிகளுக்கு அடிமையாக இருப்பது மகா கேவலம். இளைய தலைமுறை பாதை மாறி போனால் தான், நம்மால் அரசியல் செய்ய முடியும் என்று எண்ணுவோரை, ஆட்சியில் வைத்து அழகு பார்க்கும் மக்கள் சிந்திக்க வேண்டும். தமிழகத்தில், இளைஞர்களை நல்வழிப்படுத்த அரசு கவனம் செலுத்த வேண்டும்.
இந்த அரசின் இளவரசருக்கு சொந்தமான கம்பெனி தானே, அதிக சினிமாக்களை வெளியிடுது... அப்புறம் எப்படி இவங்க கோரிக்கை எடுபடும்?
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை:
சிவகங்கை மாவட்டம் கண்ணங்கோட்டையில், இரட்டை கொலையுடன், கொள்ளை சம்பவம் நிகழ்ந்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் கொள்ளையர்களுக்கு, தி.மு.க., ஆட்சியில் எந்த அளவுக்கு துணிச்சல் வந்திருக்கிறது என்பதுடன், தமிழகத்தின் இன்றைய சட்டம் - ஒழுங்கு நிலைமைக்கு, இது ஓர் எடுத்துக்காட்டு. இந்தக் கொலை, கொள்ளைக்கு காரணமானவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்.

தி.மு.க., ஆட்சியில் மட்டும் தான், கொள்ளையர்களுக்கு துணிச்சல் வருகிறதா... கடந்த கால ஆட்சியில் கொலை, கொள்ளை எதுவும் நடக்கலையா?