வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லூதியானா: பஞ்சாபில் நடந்து வரும் காங்கிரஸ் எம்.பி., ராகுலின் பாத யாத்திரையில் பங்கேற்ற, அக்கட்சியின் ஜலந்தர் தொகுதி எம்.பி., சந்தோக் சிங் சவுதரி (76) மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
ராகுலின் பாத யாத்திரை, பஞ்சாப் மாநிலத்தில் நடந்து வருகிறது. பில்லாவூர் பகுதியில் பாத யாத்திரையில் சந்தோக் சிங் நடந்த போது, மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையறிந்த ராகுல், பாத யாத்திரையை நிறுத்திவிட்டு மருத்துவமனைக்கு நேரில் சென்றார். பிறகு. சந்தோக் சிங் சவுதரி குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
எம்.பி., மறைவுக்கு பிரதமர் மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மன் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.