கரூர்: கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முன் நிறுத்தப்படும் சைக்கிள்கள், திருடப்பட்டு வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரூர் அருகே, காந்தி கிராமத்தில் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை செயல்படுகிறது.
இந்த மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள், நோயாளிகளின் கார், இருசக்கர வாகனங்களை, தனியார் பாதுகாப்பு ஊழியர்கள் உள்ளே அனுமதிப்பது இல்லை. இதனால், மருத்துவமனைக்கு வெளியே சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி விட்டு பொதுமக்கள், நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்கின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முன் நிறுத்தப்பட்ட, பலரது சைக்கிள்கள் காணாமல் போயுள்ளது.
இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது: கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை ஊழியர்கள், நோயாளிகளுக்கு தொந்தரவு ஏற்படுவதை தவிர்க்க, வாகனங்களை உள்ளே அனுமதிப்பதில்லை. இதனால், வாகனங்களை வெளியே நிறுத்திவிட்டு செல்கிறோம்.
இதில், சைக்கிள்கள் மட்டும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து திருடப்பட்டு வருகிறது. டூவிலர்களில் அலாரம், சைடுலாக் உள்ளிட்ட வசதிகள் இருப்பதால், சைக்கிள்களை மட்டும் குறிவைத்து திருடுகின்றனர்.
வசதி இல்லாத நிலையில்தான் ஏழைகள் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருகின்றனர். அவர்களின் சைக்கிள்களை திருடுவோர் மீது பசுபதிபாளையம் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.