குமாரபாளையம் மாணவருக்கு விருது
குமாரபாளையம்: மாநிலம் முழுதும் அரசு பள்ளிகளில் பல்வேறு பிரிவுகளில் கலைத்திருவிழா நடந்தது. மாணவ, மாணவியர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி, வட்டார, தாலுகா, மாவட்ட, மாநில அளவில் வெற்றி பெற்றனர்.
குமாரபாளையம் அருகே வேமன்காட்டுவலசு பள்ளியை சேர்ந்த மாணவர் இளவரசன் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்றதால் தமிழக முதல்வர் கையால் கலையரசன் விருது பெற்றார்.
கலைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலையரசன் என்ற விருதும், மாணவியர்களுக்கு கலையரசி என்ற விருதும் வழங்கப்பட்டன. குமாரபாளையம் வேமன்காட்டுவலசு பள்ளியை சேர்ந்த 6,7,8ம் வகுப்பு பிரிவில் கலையரசன் விருது ஒருவருக்கும், 9,10ம் வகுப்பு பிரிவில் இருவருக்கும் கலையரசன் விருது வழங்கப்பட்டது. சாதனை மாணவர்களை தலைமை ஆசிரியை செல்வி, பி.டி.ஏ. தலைவர் காந்திநாச்சிமுத்து உள்ளிட்ட ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.
மத்திய இணை அமைச்சரிடம் விவசாயிகள் கோரிக்கை
நாமக்கல்: விவசாய முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் மற்றும் நிர்வாகிகள் மத்திய இணை அமைச்சர் முருகனிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். அதில், மத்திய அரசு விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களிடம் பசும்பால் மற்றும் எருமைப்பால் ஆகிய இரண்டும் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகளினுடைய நிலங்களில் மீன் குட்டைகள் அமைத்து மீன்களை வளர்ப்பதற்கு தேவையான சிறப்பு பயிற்சி அளித்து வங்கிகள் மூலம் கடன் உதவி கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
விவேகானந்தர் பிறந்த நாள் விழா
குமாரபாளையம்: குமாரபாளையம் அரசு நூலகத்தில் சுவாமி விவேகானந்தர், திருச்செங்கோடு சுதந்திர போராட்ட தியாகி காளியண்ணன் பிறந்த நாள் விழா, வாசகர் வட்ட தலைவர் பிரகாஷ் தலைமையில் நடந்தது. வாசகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. வாசகர் வட்ட நிர்வாகிகள் தீனா, சித்ரா, உஷா, செல்வராணி, தனசேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.
புகையில்லா பொங்கல் விழிப்புணர்வு விழா
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் டவுன் பஞ்., அலுவலகத்தில் புகையில்லா பொங்கல் விழிப்புணர்வு நிகழ்ச்சி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. தலைவர் சித்ரா தலைமை வகித்தார்.
டவுன் பஞ்., துப்புரவு பணியாளர்களுக்கு பொங்கல், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவிற்கு செயல் அலுவலர் தனுஷ்கோடி, துணை தலைவர் ரகு, அட்மா குழு துணை தலைவர் தனபாலன், வார்டு கவுன்சிலர்கள், தி.மு.க., நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
சாலை பாதுகாப்பு வார விழா
திருச்செங்கோடு: திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில், 34 வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு கண்பரிசோதனை முகாம் நடந்தது. வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சரவணன் துவக்கி வைத்தார். திருச்செங்கோடு விவேகானந்தா மருத்துவக் கல்லூரி டாக்டர் ரமேஷ் தலைமையில் மருத்துவக் குழுவினர் கண் பரிசோதனை செய்தனர். மோட்டார் வாகன ஆய்வாளர் பாமாபிரியா மற்றும் வட்டார போக்குவரத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
* நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி., கலையரசன், டி.எஸ்.பி., சுரேஷ் ஆகியோர் மேற்பார்வையில், நாமக்கல் மற்றும் புதுச்சத்திரம் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் சார்பில், போக்குவத்து வார விழா கடைபிடிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஷாஜஹான் தலைமை வகித்தார். நெடுஞ்சாலையில், வாகனங்களில் சென்றவர்களுக்கு ஹெல்மட் அணிதல், சீட் பெல்ட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது.
கொல்லிமலை அடிவாரத்தில் குப்பை அகற்ற சோதனை ஓட்டம்
சேந்தமங்கலம்: கொல்லிமலை அடிவாரத்தில், சாலை ஓரத்தில் குப்பையை அகற்றும் நவீன இயந்திரத்துடன் கூடிய வாகன சோதனை ஓட்டம் நேற்று நடந்தது.
நாமக்கல் மாவட்டத்தின் மூலிகை சுற்றுலா தலமான கொல்லிமலை கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. கொல்லிமலைக்கு செல்ல 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து சோளக்காடு, செம்மேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர்.
கொல்லிமலைக்கு செல்லும் சாலையின் இருபுறத்திலும் மர இலைகள், குப்பைகள் தேங்குவதால், நெடுஞ்சாலை துறையினர் குப்பையை அகற்ற மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சாலை ஓரத்தில் கிடக்கும் குப்பையை, எளிதாக அகற்ற, நவீன இயந்திரத்துடன் கூடிய குப்பை சுத்தம் செய்யும் வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் சோதனை ஓட்டம், கொல்லிமலை அடிவார சாலையில் நடந்தது. சோதனை
ஓட்டத்தை, நெடுஞ்சாலை துறை உதவி கோட்டப் பொறியாளர் சுரேஷ்குமார், உதவி பொறியாளர் பிரனேஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.