நாமக்கல்: லைசென்ஸ் பெற்று தருவதாக கூறி, 8.50 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்துள்ள காரைக்குறிச்சிபுதூரை சேர்ந்தவர் ராஜேஸ்,33; லாரி உரிமையாளர். இவர் பிரபல சிக்கன் நிறுவனம் பெயரில் கடை நடத்த லைசென்ஸ் கேட்டு ஆன்லைனில் சில விவரங்களை தேடி உள்ளார்.
இதை தெரிந்து கொண்ட மர்ம நபர், ராஜேஸ் மொபைல்போனில் தொடர்பு கொண்டு, லைசென்ஸ் வாங்கி தருவதாக கூறி, முதல்கட்டமாக ராஜேஸிடம், 1.50 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார். அவர் கூறியபடி,வங்கி கணக்கில் ராஜேஷ் பணத்தை செலுத்தியுள்ளார். பின்னர் உங்களுக்கு ஆர்டர் கிடைத்து விட்டது என கூறி மேலும், 7 லட்சம் ரூபாய் வாங்கி உள்ளனர். அதையும் வங்கி கணக்கில் செலுத்த சொன்னதால், நம்பிக்கையுடன், 7 லட்சம் ரூபாயையும் ராஜேஷ் கொடுத்துவிட்டார்.
பணம் செலுத்திய பின் லைசன்ஸ் வராதாதல், மீண்டும் மர்ம நபரிடம் தொடர்பு கொண்டபோது, லைசென்ஸ் நகலை பெற மேலும், 15 லட்சம் ரூபாய் தர வேண்டும் என கேட்டு உள்ளானர். இதனால் சந்தேகம் அடைந்த ராஜேஸ், குறிப்பிட்ட அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது, தான் ஏமாற்றப்பட்டது தெரிந்து அதிர்சியடைந்தார்.
இது குறித்து நாமக்கல் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.