ஈச்சர் வேன் மோதியதில் ஆட்டோ டிரைவர் பலி
கோபி: கோபி அருகே ஈச்சர் வேன் மோதியதில், சரக்கு ஆட்டோ டிரைவர் பலியானார்.
அந்தியூர் அருகே வெள்ளித்திருப்பூரை சேர்ந்தவர் சஞ்சய் பாரதி, 19, டிரைவர்; கோபி-சத்தி சாலையில், கொங்கு நகர் என்ற இடத்தில், டாடா ஏஸ் சரக்கு ஆட்டோவை நேற்று காலை, 8:00 மணிக்கு ஓட்டிச்சென்றார்.
எதிரே வந்த ஈச்சர் வேனும், ஆட்டோவும் நேருக்குநேர் மோதிக் கொண்டது. இதில் சஞ்சய் பாரதி மற்றும் ஈச்சர் வேன் டிரைவரான கோபியை சேர்ந்த கதிரவன், 40, பலத்த காயமடைந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சஞ்சய் பாரதி இறந்தார். சத்தி அரசு மருத்துவமனையில் கதிரவன் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
காவல்துறை-மக்கள் விளையாட்டு போட்டி
ஈரோடு: காவல்துறை பயிற்சிப்பள்ளி மாணவர் மற்றும் ஆயுதப்படை காவலர் மன அழுத்தத்தை போக்கவும், மக்கள் இடையே நல்லுறவை பேணும் வகையிலும், ஈரோடு வ.உ.சி., விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தன.
கிரிக்கெட், தடகளம், கைப்பந்து, கபடி, இறகுப்பந்து உள்ளிட்ட போட்டி நடந்தது. மாவட்ட அளவில் ஈரோடு டவுன், பவானி, கோபி உள்ளிட்ட ஆறு ஆண்கள் அணியும், இரு பெண்கள் அணியும் பங்கேற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு எஸ்.பி., சசிமோகன் பதக்கம், சான்றிதழ் வழங்கினார்.
மஞ்சள் மார்க்கெட் 4 நாட்கள் விடுமுறை
ஈரோடு: பொங்கல் பண்டிகைக்காக, ஈரோடு பகுதி மஞ்சள் மார்க்கெட், 4 நாட்கள் விடுமுறை விடுக்கப்படுகிறது.
ஈரோடு பகுதியில், ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி கூட்டுறவு சங்கம் என, 4 இடங்களில் திங்கள் முதல் வெள்ளி வரை மஞ்சள் ஏல விற்பனை நடக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மஞ்சள் மார்க்கெட்டுக்கு, இன்று முதல், 17ம் தேதி வரை, நான்கு நாட்கள் விடுமுறை விடுக்கப்படுகிறது. 18ம் தேதி வழக்கம்போல், மஞ்சள் ஏலம் நடக்கும்.
மனைவி இறந்த துக்கம் தொழிலாளி தற்கொலை
டி.என்.பாளையம்: மனைவி இறந்த துக்கத்தில், கணவன் தற்கொலை செய்து கொண்டார்.
டி.என்.பாளையம், வனச்சாலை ரோடு நான்கா-வது வார்டை சேர்ந்தவர் ஞானராஜ், 50; பெயின்டிங் கூலி தொழிலாளி. இவரின் மனைவி -மரகதம். தம்பதிக்கு ஒரு மகள், மகன். இதில் மகள் ரேணு, உடல் நலக்குறைவால் நான்கு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.
மனைவி மரகதம், தி.மு.க.,வில் வார்டு கவுன்சிலராக இருந்தவர். ஐந்து மாதங்களுக்கு முன் இவரும் இறந்தார். மகன் நவீன்குமாருடன் வாழ்ந்து வந்தார். மன வேதனையில் இருந்த ஞானராஜ், நேற்று முன்தினம் காலை வீட்டில் சேலையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பங்களாப்புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
விற்பனை படு மந்தம் வியாபாரிகள் வருத்தம்
சத்தியமங்கலம்: விற்பனை மிகவும் மந்தமாக இருந்ததால், சத்தியில் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
மாட்டுப்பொங்கலை ஒட்டி, சத்தியமங்கலம் பகுதியில் கால்நடைகளுக்கு தேவைப்படும் கயிறு மற்றும் அலங்கார பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், அத்தாணி சாலையில் நேற்று அமைக்கப்பட்டன.
கடம்பூர், குன்றி, மாக்கம்பாளையம் உள்ளிட்ட மலைப்பகுதி கிராமங்களை சேர்ந்த மக்கள், பிக்-அப் வாகனங்களில் வந்து பொருட்களை வாங்கி செல்வர். கொரோனா தொற்றுக்குப் பிறகு கடைகளின் எண்ணிக்கை குறைந்து விட்டன.
சில கடைகளே போடப்பட்டிருந்தது. இதிலும் வியாபாரம் மிக குறைந்த அளவிலேயே நடந்ததாக, வியாபாரிகள் வருத்தம் தெரிவித்தனர்.