ஈரோடு: ஈரோடு அரசு மருத்துவமனை ஒப்பந்த துாய்மை பணியாளர், நான்காவது நாளாக தர்ணா போராட்டத்தை தொடர்ந்தனர்.
ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், 10 ஆண்டுக்கு மேலாக துாய்மை பணி, ஹவுஸ் கீப்பிங், காவலாளி போன்ற பணிகளில், 130 தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர்.
கிரிஸ்டல், க்யூ.பி.எம்.எஸ்., என்ற தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்கின்றனர். இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தினக்கூலியாக, 707 ரூபாய் நிர்ணயித்தது. ஆனால் ஒப்பந்த நிறுவனம், 230 ரூபாய் மட்டுமே வழங்குகிறது. மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்த கூலியை வழங்க கோரி போராட்டம், அவ்வப்போது வேலை நிறுத்தம், கலெக்டரிடம் மனு வழங்கல் என செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கலெக்டர் எச்சரிக்கையை தொடர்ந்து, ஒப்பந்த நிறுவனம், உரிய சம்பளம் வழங்குவதாக சம்மதித்துவிட்டு மீண்டும் குறைத்து வழங்கியது. இதனால் கலெக்டரிடம், 13 தொழிலாளர் மனு வழங்கினர். அவர்களுக்கு கடந்த, 10 முதல் ஒப்பந்த நிறுவனம் வேலை வழங்காமல், பணிநீக்கம் செய்ததாக கூறியது.
இதனால் பணிநீக்கம் செய்யப்பட்டோர் மற்றும் பிற தொழிலாளர்கள், அரசு மருத்துவமனை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். நான்காவது நாளாக நேற்றும் போராட்டத்தை தொடர்ந்தனர். மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாத நிலையில், அ.தி.மு.க., உள்ளிட்ட எதிர்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபடுவோரை சந்தித்து, போராட்டத்தை தீவிரப்படுத்த பேசி வருகின்றனர்.