ஓசூர்,: ஓசூரில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்ற கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார். யாருக்கும் தெரியாமல் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை தோண்டி எடுத்து, போலீசார் விசாரிக்கின்றனர்.க்ஷ
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகா, கோடியூரை சேர்ந்தவர் சக்தி; கட்டட மேஸ்திரி. இவருக்கும், ஓசூர் தேர்ப்பேட்டையை சேர்ந்த நந்தினி,26, என்பவருக்கும், 8 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு பிரவீன், 6, ஜெகநாதன், 3, என்ற இரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த, 10 மாதங்களுக்கு முன், கட்டட பணியில் ஈடுபட்டிருந்த போது, கீழே விழுந்து சக்தி உயிரிழந்தார். நந்தினி தன் குழந்தைகளுடன், ஓசூர் தேர்ப்பேட்டையில் உள்ள தன் தாய் வள்ளி, 45, வீட்டிற்கு வந்து விட்டார்.
அப்போது, பார்வதி நகரை சேர்ந்த மனைவியை பிரிந்த தனியார் நிறுவன ஊழியர் ரஞ்சித்குமார்,30, என்பவருக்கும், நந்தினிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து, தன் குழந்தைகளை அழைத்து கொண்டு கள்ளக்காதலன் ரஞ்சிகுமாருடன், நந்தினி சென்று விட்டார். ஓசூர் அருகே ஆலுாரில் வசித்து வந்தனர்; மூத்த மகன் பிரவீனை, சமத்துவபுரம் அருகே உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்து விட்டனர்.
இளைய மகன் ஜெகநாதன் மட்டும் தாய் நந்தினியுடன் இருந்தார். இந்நிலையில் கடந்த, 9 ம் தேதி தேர்ப்பேட்டையில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க நந்தினி சென்றார். அவரை பார்த்த அவரது தாய் வள்ளி, குழந்தைகள் எப்படி இருக்கின்றனர் என கேட்ட போது, மூத்த மகன் ஆதரவற்றோர் இல்லத்தில் இருப்பதாகவும், இளைய மகன் ஜெகநாதன் மாடி படியில் தவறி விழுந்து தலையில் அடிபட்டு இறந்ததாகவும் தெரிவித்தார்.
இதனால் சந்தேகமடைந்த வள்ளி, ஹட்கோ போலீசில் புகார் செய்தார். சந்தேகத்தின் பேரில் நந்தினியிடம் போலீசார் விசாரித்த போது, பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இது தொடர்பாக, போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:
கடந்த மாதம், 6ம் தேதி இரவு, 8:00 மணிக்கு நந்னிதியுடன் கள்ளக்காதலன் ரஞ்சித்குமார் குடிபோதையில் உல்லசமாக இருந்தார். இதற்கு, நந்தினியின் இளைய மகன் ஜெகநாதன் தொந்தரவாக இருந்ததால், வீட்டில் இருந்த பீர்பாட்டிலை எடுத்து, குழந்தையின் தலையில் ரஞ்சித்குமார் அடித்தார். குழந்தை படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனைக்கு அழைத்து செல்லவில்லை. 7 ம் தேதி மதியம் குழந்தையை, ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அடுத்த நாள் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து கடந்த, 22 ல் குழந்தையை டிஸ்சார்ஜ் செய்து, பார்வதி நகரில் உள்ள தன் வீட்டிற்கு கள்ளக்காதலன் ரஞ்சித்குமார் அழைத்து வந்தார். 25ம் தேதி காலை மதிய உணவு சாப்பிட்ட குழந்தை ஜெகநாதன் வாந்தி எடுத்த நிலையில் மதியம் உயிரிழந்தான். அதனால், ஓசூர் கோகுல்நகரில் உள்ள சுடுகாட்டில், போலீசாருக்கு தெரியாமல் ரஞ்சித்குமார் சடலத்தை அடக்கம் செய்தார். நடந்த விபரத்தை வெளியே கூறினால், கொலை செய்து விடுவதாக நந்தினியை மிரட்டினார். அதனால் அவர் வெளியே கூறவில்லை. தற்போதைய விசாரணையில் தெரியவந்தள்ளது. இவ்வாறு போலீசார் கூறினர்.
இதையடுத்து, ஓசூர் தாசில்தார் கவாஸ்கர் முன்னிலையில், நேற்று காலை குழந்தையின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு, அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் குழந்தை தலையில் தாக்கி கொலை செய்யப்பட்டது தெரிந்தது. இதனால், கள்ளக்காதலன் ரஞ்சித்குமாரை நேற்று போலீசார் கைது செய்தனர். நந்தினி மற்றும் ரஞ்சித்குமாரின் தாய் சொர்ணம்மா ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.