ஓசூர்,: பஞ்சாப் மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான வாலிபால் போட்டிகளில், மூன்று பிரிவுகளிலும் ஓசூர் அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் பகுதியில், தேசிய அளவிலான வாலிபால் போட்டி மூன்று நாள் நடந்தது. இதில், 14, 17 மற்றும் 19 வயதிற்கு உட்பட்டோர் என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழகத்தில் இருந்து, மூன்று பிரிவுகளிலும் ஓசூர் அணி பங்கேற்றது.
அதேபோல், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பஞ்சாப் உட்பட, 9 மாநில அணிகள் பங்கேற்று விளையாடின. 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவு இறுதி போட்டியில், ஓசூர் அணியும், பஞ்சாப் அணியும் மோதின. அதில், 25 - 19, 25 - 21 என்ற நேர் செட் கணக்கில் ஓசூர் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
அதேபோல், 17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில், ஓசூர் அணியும், உத்தரபிரதேச அணியும் மோதின. அதில், 25 - 21, 25 -22 என்ற நேர் செட் கணக்கில் ஓசூர் அணி வெற்றி பெற்றது. 19 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில், பஞ்சாப் அணியை இறுதி போட்டியில் சந்தித்த ஓசூர் அணி, 25 - 22, 25 -19 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றது.
பஞ்சாப்பில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஓசூர் திரும்பிய அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் தாயுமானவன் ஆகியோருக்கு, பஸ் ஸ்டாண்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு, ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர்.