நிலத்தகராறில் 6 பேர் மீது வழக்கு
நங்கவள்ளி: அண்ணன், தம்பி இடையே ஏற்பட்ட நிலத்தகராறில், 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நங்கவள்ளி கரட்டுப்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ், 33; இவருக்கும் சகோதரரான ராஜேந்திரன், 65, ஆகிய இருவருக்கும் இடையே நிலத்தகராறு தொடர்பாக முன்விரோதம் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
அதில் ராஜேஷ் அளித்த புகார்படி, கிருஷ்ணமூர்த்தி, 34, கணேசன், 36, சுரேஷ், 27, ராஜேந்திரன், 65, ஆகியோர் மீதும், ராஜேந்திரன் அளித்த புகார்படி, தங்கம், 65, ராஜேஷ், 31, ஆகியோர் மீதும், நங்கவள்ளி போலீசார், நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
அரசு பள்ளிக்கு பொங்கல் சீர்
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, குரால்நத்தம் அரசு தொடக்கப்பள்ளியில், சமத்துவ பொங்கல் விழா, நேற்று, கொண்டாடப்பட்டது. கட்டபுளியமரம் பஸ் ஸ்டாப்பிலிருந்து பெற்றோர், கரும்பு, பொங்கல் பானை சீர்வரிசையுடன் பள்ளிக்கு ஊர்வலமாக சென்றனர்.
பள்ளி வளாகத்தில், ஐந்து பானை வைத்து பொங்கல் வைத்தனர். பள்ளி மாணவ, மாணவியர், வேட்டி, சட்டை, பட்டு பாவாடை அணிந்து வந்து, கலைநிகழ்ச்சியில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். அபாகஸ் முதல் பயிற்சி வகுப்பு துவக்கப்பட்டது.
அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கி, பள்ளி சார்பில் தயாரிக்கப்பட்ட காலண்டர் வழங்கப்பட்டது. அப்பள்ளி ஆசிரியர் தெய்வநாயகம், சமூக ஆர்வலர் சந்திரசேகர், பள்ளி மேலாண்மை குழுவினர் பங்கேற்று, பொங்கல் விழாவை நடத்தினர்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
சேலம்: சேலத்தில், நேற்று நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் கார்மேகம் பங்கேற்றார்.
சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, சேலம் ஐந்து ரோடு பகுதியில், நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் கார்மேகம் பங்கேற்று, தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டி வருபவர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், சேலம் போக்குவரத்து துணை கமிஷனர் பிரபாகரன், மாநகர துணை போலீஸ் கமிஷனர் மாடசாமி, ஆர்.டி.ஓ.,க்கள் கல்யாண்குமார், ராஜராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் மற்றும் கையேடு வழங்கப்பட்டது.
மக்களை மிரட்டிய வாலிபர் கைது
மேட்டூர்: பொது மக்களை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். மேட்டூர், கருமலைக்கூடல் போலீஸ் எஸ்.ஐ., சுகுமார், நேற்று போலீசாருடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போபோது, சின்னக்காவூர் பஸ் ஸ்டாப்பில் பொதுமக்களை மிரட்டும் வகையில் பேசிக்கொண்டிருந்த, மேட்டூர், தங்கமாபுரிபட்டணத்தை சேர்ந்த முகமது உசேன், 27, என்ற வாலிபரை, நேற்று கைது செய்தனர்.