பாதிக்கப்பட்ட போலீசாருக்கு ரூ.6.20 லட்சம் கருணை தொகை
சேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், கணியாமூர் தனியார் பள்ளியில் கடந்தாண்டு, ஜூலை, 17ல் கலவரம் ஏற்பட்டது. அப்போது சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, சில போலீசார் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட போலீசாருக்கு கருணை தொகை வழங்கும் நிகழ்ச்சி, நெத்திமேட்டில் உள்ள எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், 31 போலீசாருக்கு கருணை தொகையாக தலா, 20 ஆயிரம் ரூபாய் என மொத்தம், 6 லட்சத்து, 20 ஆயிரம் ரூபாயை எஸ்.பி., சிவக்குமார் வழங்கினார்.
குட்டையில் மூழ்கி போதை ஆசாமி பலி
சேலம்,: குட்டையில் மூழ்கி போதை ஆசாமி பலியானது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சேலம், இளம்பிள்ளை அருகே, நல்லனம்பட்டியை சேர்ந்த ராமசாமி மகன் அசோக், 20; மேக்னசைட் குவாரியில் பணிபுரிந்து வந்தார். நேற்று மதியம், 3:30 மணிக்கு, கொண்டப்பநாயக்கன்பட்டி, ஜீவா நகரில் உள்ள செட்டியார் மைன்சில் மது அருந்தி உள்ளார். போதையில் குட்டையில் குளித்த அவர், தண்ணீரில் மூழ்கி இறந்தார். கன்னங்குறிச்சி போலீசார், செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் குட்டையில் மூழ்கிய வாலிபரின் உடலை
மீட்டனர்.
பொங்கல் பண்டிகைக்கு கைதிகளுக்கு ரூ.100 ஒதுக்கீடு
சேலம்,: தமிழக சிறைகளில் உள்ள கைதிகளுக்கு, பொங்கல் பண்டிகையையொட்டி, நாளை முழு கரும்பு வழங்க, தலா, 100 ரூபாய் ஒதுக்கீடு செய்து, அரசு உத்தரவிட்டுள்ளது. பொங்கல் தினத்தன்று, காலையில், வெண்பொங்கல், வடை, சட்னி, சாம்பார், சர்க்கரை பொங்கல், வெஜிடபுள் பிரியாணியுடன் முழு கரும்பு கிடைக்கும். அத்துடன், பொங்கலை கொண்டாடும் விதமாக, பேச்சு மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தவும், சிறைத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக, சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.