கரூர்: கரூர் பஸ் ஸ்டாண்டில், பழுதடைந்த வணிக வளாக கட்டடம் இடிக்கப்பட்ட பகுதியில், ஷெட் அமைக்கப்படாததால், பயணிகள் பனி, வெயிலில் நின்று அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கரூர் பஸ் ஸ்டாண்டில் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தும் இடத்தில் இருந்த, வணிக வளாக கட்டடம் கடந்த மாதம் முழுமையாக, இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. இந்த பகுதியில் இருந்த புறக்காவல் நிலையம், பயணிகள் காத்திருப்பு கட்டடமும், இடிக்கப்பட்டது. தற்போது திறந்த வெளியாக உள்ள அந்த இடத்தில், பயணிகள் நிற்க வசதியாக ஷெட் எதுவும் அமைக்கப்படவில்லை. இதனால், மதுரை உள்ளிட்ட, தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள், பஸ்சுக்காக திறந்தவெளியில் காத்திருக்கும் அவல நிலை உள்ளது.
இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்காக, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்ல, நேற்று காலை ஏராளமான பயணிகள், குழந்தைகள், பெரியவர்களுடன் கரூர் பஸ் ஸ்டாண்டுக்கு வந்தனர். பழைய கட்டடம் இடிக்கப்பட்ட இடத்தில், ஷெட் அமைக்கப்படாததால், பயணிகள் பஸ்சுக்காக கொளுத்தும் வெயிலில் நின்று கொண்டிருந்தனர்.
நாளை முதல் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், இன்று கூடுதலாக பயணிகள் கரூர் பஸ் ஸ்டாண்டுக்கு வர வாய்ப்புள்ளது. மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள், கரூரில் சாயப்பட்டறை, கொசுவலை நிறுவனங்களில் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர். அவர்களும் இன்று ஊர் திரும்பும் நிலையில், கரூர் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் நலன் கருதி, பழைய கட்டடம் இடிக்கப்பட்ட இடத்தில், தற்காலிகமாக ஷெட் அமைக்க, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.