கிருஷ்ணராயபுரம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் வெற்றிலை விலை அதிகரித்து, 100 கவுளி கொண்ட மூட்டை ரூ.6,500க்கு விற்பனையானது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வல்லம், பிள்ளபாளையம், மகிளிப்பட்டி, நந்தன்கோட்டை, கள்ளப்பள்ளி, திருக்காம்புலியூர், பிச்சம்பட்டி, சிந்தலவாடி ஆகிய இடங்களில் விவசாயிகள் பரவலாக 200 ஏக்கர் பரப்பளவில் வெற்றிலை சாகுபடி செய்துள்ளனர்.
வெற்றிலையை மொத்தமாக கரூர், கோவை, திருப்பூர், தஞ்சாவூர், கும்பகோணம், நாகப்பட்டினம், வேலுார் ஆகிய இடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும், லாலாப்பேட்டை, கிருஷ்ணராயபுரம் ஆகிய இடங்களில் செயல்படும் வெற்றிலை கமிஷன் மண்டிகளிலும் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
ஆங்கில புத்தாண்டு முதல் வெற்றிலை விலை உயர்ந்து வருகிறது. கடந்த 1ம் தேதி 100 கவுளி கொண்ட வெற்றிலை மூட்டை 5,000 ரூபாய்க்கு விற்றது. தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெற்றிலை தேவை அதிகரிப்பு காரணமாக மேலும் விலை உயர்ந்துள்ளது.
நேற்று, 100 கவுளி கொண்ட வெற்றிலை மூட்டை 6,500 ரூபாய்க்கு விற்பனையானது. விலை தொடர்ந்து உயர்வதால் வெற்றிலை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.