நாமக்கல்,: நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்ட் நகரில் இருந்து, 7 கி.மீ., துாரத்தில் அமைவதால், பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. அதே சமயம் இணைப்பு சாலை இல்லாததால், பஸ் ஸ்டாண்டை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் சிக்கல் எழுந்துள்ளது.
நாமக்கல் நகரில், நாளுக்கு நாள் போக்கு வரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. அதனால், சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள், நெரிசலில் சிக்கி விழி
பிதுங்குகின்றனர்.
இப்பிரச்னைக்கு நிரந்த தீர்வு காண வேண்டும் என்பதற்காக, முதலைப்பட்டியில் உள்ள இந்து சமய அறநிலையத் துறையினருக்கு சொந்தமான, 12.90 ஏக்கர் நிலத்தில், புதிய புறநகர் பஸ் ஸ்டாண்ட் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான தொகையும், நகராட்சி சார்பில் வழங்கப்பட்டது.
இங்கு புதிய பஸ் ஸ்டாண்ட் அமைப்பதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். முதலில், சுற்று வட்டச்சாலை (ரிங் ரோடு) அமைக்க வேண்டும். அதையடுத்து, புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், 2022 அக்., 20ல், தமிழக நகராட்சி நிர்வாகிகள் துறை அமைச்சர் நேரு, புதிய பஸ் ஸ்டாண்ட் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார்.
அப்போது, அமைச்சர் நேரு பேசும்போது, '10 மாதத்தில், பணிகள் முடிக்கப்பட்டு, அணுகு சாலையும் அமைக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்' என்றார். தற்போது, பணி நடந்து வருகிறது.
அமைச்சர் நேரு குறிப்பிட்டபடி, 10 மாதத்தில் பணி முடிந்தாலும், பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ரிங் ரோட்டுடன் கூடிய அணுகுசாலை அமைத்தால் மட்டுமே பஸ்கள் வந்து செல்ல வசதியாக இருக்கும்.
பல ஆண்டுகளாக ரிங் ரோடு அமைப்பதற்கு சர்வே பணி மட்டுமே நடந்து கொண்டுள்ளது... முழுமையாக பணி முடியவில்லை. அதனால், பஸ் ஸ்டாண்ட் பணி முழுமையாக முடிந்தாலும், பஸ் ஸ்டாாண்ட் செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் வளர்ச்சிக்குழு தலைவர் ேஷக்நவீத்: அரசு விதிகளின்படி, நெடுஞ்சாலையையொட்டி பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும். ஆனால், நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட முதலைப்பட்டியில், இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்படுகிறது.
முதலைப்பட்டியில் இருந்து, புது பஸ் ஸ்டாண்ட் வரை, ஒன்னறை கி.மீ., துாரத்துக்கு இணைப்பு சாலை அமைக்க, அவசர கதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இணைப்பு சாலை இல்லை என்றால், பஸ் ஸ்டாண்ட் கட்டிய பின், பயன்பாட்டுக்கு கொண்டுவராமல், காட்சி பொருளாகவே காணப்படும்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின், நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன்: புதிய பஸ் ஸ்டாண்ட், புறவழிச்சாலையில் இருந்து, ஒன்னறை கி.மீ., துாரத்தில் அமைகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, ரிங் ரோடு போட வேண்டும் என்பது பல ஆண்டு கோரிக்கை. ஆனால், அத்திட்டம் இதுவரை செயல்படுத்தவில்லை.
தற்போது அமையும் பஸ் ஸ்டாண்ட், 7 கி.மீ., துாரத்தில் அமைகிறது. இரவு நேரங்களில் வெளியூரில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரும் பயணிகள், நகர்ப்பகுதிக்கு வருவதற்கு பல மணி நேரம் காத்திருக்கும் சூழ்நிலை உள்ளது.
குறிப்பாக, பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை காணப்படுகிறது. இரவு நேரங்களில் தடையில்லாமல் பஸ் போக்குவரத்து ஏற்படுத்த வேண்டும். பயணிகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். நகராட்சி துணைத்தலைவர் பூபதி கூறுகையில், '' ரிங் ரோடு வந்ததும், இணைப்பு சாலை போடப்படும். இது குறித்து, சட்ட சபையில் அறிவிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.