குமாரபாளையம்: குமாரபாளையம் விசைத்தறி தொழிலாளர்களுகான பொங்கல் போனஸ் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. வரும், 23 ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
குமாரபாளையம் விசைத்தறி தொழிற்சங்கங்கள் சார்பில், 20 சதவீத பொங்கல் போனஸ் கேட்டிருந்தனர். இதற்கு விசைத்தறி உரிமையாளர்கள் உடன்படவில்லை.
நேற்றுமுன்தினம் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் சண்முகவேல், தொழிலாளர் நல ஆய்வாளர் முருகேசன் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் விசைத்தறி உரிமையாளர்கள் பங்கேற்கவில்லை.
மீண்டும் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் விசைத்தறி உரிமையாளர்கள் பங்கேற்று, தங்கள் தரப்பில், 8.15 சதவீதம் மட்டுமே தர முடியும் என கூறியதால், விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் உடன்படவில்லை. மூன்று கட்ட பேச்சு வார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இது குறித்து ஏ.ஐ.சி.சி.டி.யூ. விசைத்தறி தொழிற்சங்க நிர்வாகி சுப்பிரமணி கூறியதாவது:
விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் பங்கேற்ற போனஸ் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. ஜன. 23 முதல் எங்கள் சங்கம் சார்பில், 20 சதவீத போனஸ், 80 சதவீத கூலி உயர்வு வேண்டி காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
முற்போக்கு பொது தொழிலாளர் சங்கம் சார்பில் மாநில துணை தலைவர் செல்வராஜ் கூறியதாவது: போனஸ், கூலி உயர்வு, பி.எப்., பணம் பிடித்தம், ஈ.எஸ்.ஐ.,மருத்துவ காப்பீடு, அடையாள அட்டை உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., தலைமையில் நடக்கும் பேச்சுவார்த்தையில் பங்கேற்பது என விசைத்தறி தொழிலாளர் சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.