இறைச்சி கடைகளுக்கு 16ம் தேதி விடுமுறை
ஈரோடு: திருவள்ளுவர் தினம் நாளை மறுதினம் (௧௬ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதனால் அன்றைய தினம் ஈரோடு மாநகராட்சி பகுதி மற்றும் மாவட்டத்தில் ஆடுவதை செய்யும் கூடத்தில் ஆடுகளை வதை செய்ய அனுமதி இல்லை. அன்றைய தினம் ஆடு வதைக்கூடங்கள் செயல்படாது. மேலும், மாவட்டத்தில் அனைத்து ஆடு, மாடு உள்ளிட்ட இறைச்சி விற்பனை செய்யும் கடைகளுக்கும் விடுமுறை விடுக்கப்படுகிறது. விதிமீறி இறைச்சி கடைகள் செயல்பட்டால், இறைச்சி பறிமுதல் செய்யப்படும். சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இளம்பெண் இறப்பு போலீசார் விசாரணை
கோபி: இளம்பெண் இறப்பு குறித்து, திங்களூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
பெருந்துறை அருகே திங்களூரை சேர்ந்தவர் திவ்யா, 22; நேற்று முன்தினம் செல்பாஸ் மாத்திரையை சாப்பிட்டதாக கூறி, நண்பர் விஜயராகவன், 40, உதவியுடன், பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். அவரின் சகோதரி பூங்கொடி, 32, புகாரின்படி, திங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
'கருப்பன்' தாக்கியதில் பசுமாடு படுகாயம்
சத்தியமங்கலம்: தாளவாடி அருகே விரட்டியபோது, ஊருக்குள் புகுந்த 'கருப்பன்' யானை, பசுமாட்டை தாக்கி விட்டு வனப்பகுதிக்குள் சென்றது.
தாளவாடி மலையில் அட்டகாசம் செய்து வரும், 'கருப்பன்' ஒற்றை யானையை பிடிக்க வனத்துறையினர், மூன்று குழுவாக பிரிந்து டிரோன் கேமரா மூலம் கண்காணித்தனர். நேற்று முன்தினம் இரவு கும்கி யானைகளை வைத்து, கருப்பன் நடமாட்டத்தை கண்காணித்து சுற்றி வளைத்தனர்.
இதனால் நேற்று அதிகாலை மல்கொத்திபுரம் ஊருக்குள் கருப்பன் புகுந்தான். அப்போது சென்னஞ்சம்மா என்பவரின் வீட்டு வாசலில் கட்டியிருந்த சினை பசுமாட்டை, தந்தத்தால் குத்திவிட்டு வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தான். வனத்துறையினர் கருப்பனை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால், அப்பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சமத்துவ பொங்கல் உறுதிமொழி ஏற்பு
தாராபுரம்: தாராபுரம் அருகே சமத்துவ பொங்கல் விழாவில், சமத்துவ உறுதிமொழி ஏற்றப்பட்டது. குண்டடத்தை அடுத்த செங்கோடம்பாளையம் சமத்துவபுரத்தில், சுகாதார மற்றும் சமத்துவ பொங்கல் விழா நேற்று நடந்தது. திரளான பெண்கள் கும்மி அடித்து பாட்டு பாடினர். சுய உதவி குழு பெண்களுக்கு, வாழ்த்து மடல் வழங்கப்பட்டது. விழாவையொட்டி, பெண்கள் வரைந்த கோலங்களை, திருப்பூர் கலெக்டர் வினித் பார்வையிட்டார்.