கோபி: கீழ்பவானி வாய்க்காலில் கோபி அருகே இளம்பெண் உடலும், வெள்ளோடு அருகே ஆண் குழந்தை உடலும் மீட்கப்பட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே சின்னக்குளம் என்ற இடத்தில், கீழ்பவானி வாய்க்காலில், 30 வயது பெண் உடல் கிடப்பதாக, கோபி போலீசாருக்கு நேற்று மாலை, 5:00 மணிக்கு தகவல் கிடைத்தது. போலீசார் உடலை மீட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல் வெள்ளோடு அருகே கீழ்பவானி வாய்க்காலில் மிதந்த, இரண்டு வயது மதிக்கத்தக்க, ஆண் குழந்தை உடலை, வெள்ளோடு போலீசார் நேற்று கைப்பற்றி, பெருந்துறை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
கோபி போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பெண் திருப்பூர் மாவட்டம், குன்னத்துாரை சேர்ந்த ரஞ்சிதம், 26, என தெரிய வந்தது. ஆனால், வெள்ளாடு அருகே மீட்கப்பட்ட குழந்தை யாருடையது என்பது தெரியவில்லை. ஒருவேளை ரஞ்சிதத்தின் குழந்தையாக இருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.