பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட மக்கள் புறப்பட்டு சென்றதால், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் நேற்று வழக்கத்தை விட கூட்டம் அலைமோதியது. இரண்டு நாளில் 2.40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.
பொங்கல் பண்டிகை ஜன., 15 முதல் 17ம் வரையில் கொண்டாடப்படுகிறது. இதனால், சென்னையில் இருந்து நேற்று முன்தினம் முதல் சொந்த ஊர்களுக்கு புறப்படத் துவங்கினர். ஏற்கனவே, முன்பதிவு செய்த பயணியர் நேற்றும் பயணம் மேற்கொண்டனர்.
இதனால், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் வழக்கத்தை விட கூட்டம் அலைமோதியது. தென்மாவட்ட விரைவு ரயில்களின் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம் பிடிக்க கடும் போட்டி ஏற்பட்டது. நீண்ட வரிசையில் பயணியர் காத்திருந்து, இடம் பிடித்தனர்.
ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதுபோல், 'சிசிடிவி' கேமராக்கள் வாயிலாக, கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பயணியர்களின் உடைமைகளை சோதனை மேற்கொண்ட பிறகே, ரயில் நிலையங்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
பொங்கல் பண்டிகையையொட்டி, பயணியருக்கு தேவைக்கு ஏற்றார்போல், சென்னையில் இருந்து நாகர்கோவில், கோவை, தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி, கோவையில் இருந்து திண்டுக்கல் உட்பட பல்வேறு ஊர்களுக்கு, மொத்தம் 24 சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறோம்.
கடந்த இரண்டு தினங்களில் மட்டும் சென்னையில் இருந்து ரயில்களில் மட்டுமே 2.40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். இன்றும் ரயில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.