சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா, கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். இந்த அறுவடைத் திருநாள் உலகம் முழுவதும் பரந்து விரிந்திருக்கும் தமிழ் மக்கள் அனைவருக்கும் செழுமையையும் நிறைவையும் தருவதாக அமையட்டும்.
கவர்னர் ரவி

பொங்கல் என்பது நம் தமிழ் மக்களின் பெருமையை பறைசாற்றும் பண்டிகை, பல்லாயிரம் ஆண்டுகால கலாசாரம் பாரம்பரியத்தை பொங்கல் திருவிழாவாக கொண்டாடுகிறோம். நமது வீரத்தை 'ஜல்லிக்கட்டு' விழாவாக இந்த நாளில் கொண்டாடுகிறோம். இந்த அறுவடை திருநாளை எங்கிருந்தாலும் எல்லா கிராமங்களிலும் சூரிய கடவுள் மற்றும் நம் விருப்ப தெய்வங்களை கைக்கூப்பி வணங்க பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டு மரியாதை செலுத்துவோம்.
முதல்வர் ஸ்டாலின்

மக்கள் அனைவருக்கும் இன்பம் பொங்கும் பொங்கல் நல்வாழ்த்துகள். மனிதன் மட்டுமல்ல. மற்ற உயிரினத்தையும் தன்னோடு இணைந்து வாழ்ந்த சமூகம் நம்முடையது. மக்களின் இதயங்களில் என்றும் இன்பம் பொங்கட்டும். செங்கரும்பை போல மக்கள் வாழ்வு தித்திக்கட்டும். பொங்கல் வாழ்த்துகள்.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்

'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பதற்கேற்ப, இல்லங்கள் தோறும் பொங்கல் பொங்கட்டும், இதயங்கள் தோறும் இன்பங்கள் தங்கட்டும் என நெஞ்சார வாழ்த்தி, தமிழக மக்கள் அனைவரும் அன்போடும், மகிழ்ச்சியோடும் ஒற்றுமையாக வாழ எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!
பாமக நிறுவனர் ராமதாஸ்
தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகிலும் உள்ள அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வேண்டும். அனைவரின் துயரங்களும் தீர வேண்டும். நாட்டில் நலம், வளம், அமைதி, மகிழ்ச்சி, சகோதரத்துவம் ஆகியவை செழிக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக தமிழர்களின் வாழ்க்கையில் தைப்பொங்கல் திருநாள் எல்லா நன்மைகளையும் வழங்கட்டும் என்று கூறி உலகத்தமிழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
பாமக தலைவர் அன்புமணி
தைப்பொங்கல் எப்போதும் நன்மைகளை மட்டுமே வழங்கும். அந்த வகையில் தமிழர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகுக்கும் அன்பு, அமைதி, நிம்மதி, மகிழ்ச்சி, நல்லிணக்கம், வளங்களையும், தைத்திங்களும், தமிழ்ப்புத்தாண்டு வழங்க வேண்டும். அத்துடன் நம்மை வாழ வைக்கும் இயற்கைக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில், தமிழர்கள் அனைவரும் இயற்கையை காக்க தைப்பொங்கல் நாளில் உறுதியேற்று கொள்ள வேண்டும்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன்
மதங்கள், ஜாதிகள் என அனைத்தும் வேற்றுமைகளையும் கடந்து இயற்கையைப் போற்றி, உழைப்பின் உன்னதத்தை உயர்த்தி காட்டும். இந்த நாளின் சிறப்பை மென்மேலும் வளர்த்தெடுப்போம். மக்கள் ஒற்றுமை திருவிழாவாக தமிழ்வெளியெங்கு கொண்டாடி மகிழ்ந்திருப்போம்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன்
மதசார்பின்மையை பாதுகாத்திட பொங்கல் திருநாளில் உறுதியேற்போம். நாடா? அகமா என்று நாடகமாடுவோரின் அரசியல் நுட்பத்தை உணர்ந்து சதியை முறியடிப்போம். சமூக நீதி, சமத்துவம், அம்பேத்கர் பெயரை உச்சரிக்க மறப்போரை புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் சமூகத்தை காத்திட உறுதியேற்போம்.