அவனியாபுரம்: தமிழக கவர்னர் ரவி மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டை பார்வையிட வந்தால் அவருக்கு தேவையான முழு பாதுகாப்பை மாவட்ட நிர்வாகம், போலீஸ் வழங்கும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
அவனியாபுரத்தில் நாளை நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நீதிமன்ற உத்தரவின் படி ஆலோசனை குழு முன்னிலையில் நடைபெறுகிறது. மதுரை மாவட்டத்தில் 3 இடங்களில் ஜல்லிக்கட்டு எந்த பாகுபாடும் இல்லாமல் பாதுகாப்பான முறையில் நடைபெறும்.
ஆன்லைன் முன்பதிவு விண்ணப்பங் களில் கடந்த ஆண்டுகளில் சிறப்பாக விளையாடிய காளைகளின் பட்டியல்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றுக்கு இந்த ஆண்டு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. பரிசு வழங்குவதில் எந்த குளறுபடியும் இருந்ததில்லை. வருங்காலங்களிலும் இருக்காது. தமிழக கவர்னர் ஜல்லிக்கட்டை பார்வையிட வந்தால் அவருக்கு தேவையான முழு பாதுகாப்பை மாவட்ட நிர்வாகம், போலீஸ் வழங்கும், என்றார்.