நீதிமன்ற உத்தரவுகளை சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்வது தொடர்பாக சுற்றறிக்கை பிறப்பிக்க, சென்னை உயர் நீதிமன்றம், மூன்று வாரம் கூடுதல் அவகாசம் வழங்கி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், கீழ்ப்புதுப்பட்டு கிராமத்தில் உள்ள 2.50 ஏக்கர் நிலம் தொடர்பாக, திண்டிவனம் சிவில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, மரக்காணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய, வெங்கடேசன் என்பவர் வழங்கினார்; அதைப் பதிவு செய்ய, சார் பதிவாளர் மறுத்தார்.
பதிவுச் சட்ட விதியின்படி, நான்கு மாதங்களுக்குள் தீர்ப்பை பதிவு செய்ய வேண்டும்; அந்த காலவரம்பை தாண்டி விட்டதால், பதிவு செய்ய முடியாது என, சார் பதிவாளர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வெங்கடேசன் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:
நீதிமன்ற உத்தரவை பதிவு செய்ய, காலவரம்பு குறுக்கே நிற்காது என்பதை, பல வழக்குகளில் இந்த நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மீண்டும் மீண்டும் நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பித்தும், சார் பதிவாளர்கள் பதிவு செய்ய மறுக்கின்றனர்; காலவரம்பை சுட்டிக் காட்டுகின்றனர்.
எனவே, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை கண்டிப்புடன் அமல்படுத்தும்படி, அனைத்து பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்கும்படி, பத்திரப்பதிவு ஐ.ஜி.,க்கு உத்தரவிடப்படுகிறது.
மேலும், பதிவுக் கட்டணத்தைப் பொறுத்தவரை, வழக்கில் குறிப்பிட்ட மதிப்பை தான் கணக்கில் கொள்ள வேண்டும்; வழிகாட்டு மதிப்பு, சந்தை மதிப்பை கணக்கில் கொள்ளக் கூடாது. சார் பதிவாளர்கள் இதை மீறினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
உத்தரவை அமல்படுத்தியது குறித்த விசாரணை, நீதிபதி சுரேஷ்குமார் முன் நடந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் சிலம்பண்ணன் ஆஜராகி, சுற்றறிக்கை பிறப்பிப்பது, துறையின் தீவிர பரிசீலனையில் இருப்பதாகவும், பதிவு சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ளவும், நான்கு வார அவகாசம் வேண்டும் என்றும் கேட்டார்.
இதையடுத்து, நீதிமன்றத்தில் வழக்குகள் குவிவதை கட்டுப்படுத்தும் வகையில், அரசு விரைந்து முடிவெடுக்கும்படி, நீதிபதி தெரிவித்தார். பிரச்னைக்கான தீர்வுடன் வர, அரசுக்கு மூன்று வார அவகாசத்தை வழங்கி, விசாரணையை வரும் 31க்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.