கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற, 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்களை, கூடலுார் போலீசார் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர்.
கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு, நீலகிரி மாவட்டம், கூடலுார் வழியாக புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கூடலுார் டி.எஸ்.பி., மகேஷ்குமார் உத்தரவுபடி, இன்ஸ்பெக்டர் அருள் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு, தொரப்பள்ளி அருகே வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, கர்நாடகாவில் இருந்து பிஸ்கட் பெட்டிகளை ஏற்றி வந்த, லாரியை சோதனை செய்த போது, அதில் புகையிலை பொருட்களை, கேரளாவுக்கு கடத்தி செல்வது தெரியவந்தது. லாரியுடன், 64 மூட்டைகளில் இருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு, 40 லட்சம் ரூபாய்.
இதை கொண்டு வந்த பாலக்காடு மண்ணார்க்காடு பகுதியை சேர்ந்த சுதிர்,43, என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணை நடந்து வருகிறது.