''கோவில்பட்டி தொகுதியில் கட்டப்படும் வீரமாமுனிவர் மணிமண்டபத்தில், அவரது பிறந்த நாளை கொண்டாடுவது குறித்து, முதல்வருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.
சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - கடம்பூர் ராஜு: கோவில்பட்டி தொகுதியில், வீரமாமுனிவருக்கு மணிமண்டபம் கட்ட அரசு ஆவன செய்யுமா?
அமைச்சர் சாமிநாதன்: துாத்துக்குடி மாவட்டம், காமநாயக்கன்பட்டி கிராமத்தில், வீரமாமுனிவருக்கு அவரது உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டும் பணி, 40 சதவீதம் நிறைவடைந்துள்ளது. விரைவில் பணி முடிக்கப்பட்டு, பொது மக்கள் பார்வைக்கு அர்ப்பணிக்கப்படும்.
ராஜு: அ.தி.மு.க., ஆட்சியில், வீரமுாமுனிவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என, 2020 நவ., 11ம் தேதி, முதல்வராக இருந்த பழனிசாமி அறிவித்தார். அடுத்து ஜனவரி மாதமே இடம் தேர்வு செய்யப்பட்டு, பணி துவக்கப்பட்டது. அப்பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
அமைச்சர் சாமிநாதன்: வேகமாக பணி முடிக்கப்படும். 1968ல் அண்ணாதுரை முதல்வராக இருந்தபோது, சென்னை கடற்கரையில் வீரமாமுனிவர் சிலை திறக்கப்பட்டது.
ராஜு: ஆண்டுதோறும் நவ., 8ல், தமிழ் அகராதியியல் நாள் எனக் கூறி, வீரமாமுனிவர் பிறந்த நாளை அரசு கொண்டாடி வருகிறது. அன்று, சென்னை கடற்கரையில் உள்ள, அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது. மணிமண்டபம் கட்டப்பட்ட பின், வரும் நவ., 8 முதல் அவரது பிறந்த நாளை மணிமண்டபத்தில் கொண்டாட வேண்டும்.
அமைச்சர் சாமிநாதன்: முதல்வருடன் கலந்து பேசி, நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.