சி.எஸ்.ஐ., எனப்படும் தென்னிந்திய திருச்சபையின் 'சினாடு' நிர்வாகிகள் தேர்தல் முடிவுகளை, மறு உத்தரவு வரும் வரை வெளியிட, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த, தென்னிந்திய திருச்சபையின் தலைமைச் செயலக கவுன்சில் உறுப்பினர்கள் சுனில்தாஸ் மற்றும் ஜெயராஜ் ஆகியோர் தாக்கல் செய்த மனு:
தென்னிந்திய திருச்சபையின் 'மாடரேட்டர்' எனப்படும் தலைமை பேராயராக தர்மராஜ் ரசலம் என்பவர் உள்ளார். இவர், தென் கேரளா டயோசிஸ் பேராயராகவும் உள்ளார்.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 24 டயோசிஸ்கள், தென்னிந்திய திருச்சபையில் உள்ளன.
வழக்குகள் பதிவு
'சினாடு' எனப்படும் சி.எஸ்.ஐ., தலைமைச் செயலகத்தின் உறுப்பினர்களாக டயோசிஸ் பேராயர்களும், டயோசிஸ் பொதுச் செயலர் மற்றும் பொருளாளர்களும் இருப்பர். சினாடு நிர்வாகிகளாக மாடரேட்டர், துணை மாடரேட்டர், பொதுச் செயலர், பொருளாளர் இருப்பர்.
சி.எஸ்.ஐ.,யின் தலைமை பொறுப்பில் மாடரேட்டர் இருப்பார். டயோசிஸ் பேராயர்களில் ஒருவர், மாடரேட்டராக தேர்ந்தெடுக்கப்படுவார். சி.எஸ்.ஐ.,க்கு சொந்தமாக, 7 லட்சம் கோடி மதிப்புக்கும் மேல் சொத்துக்கள் உள்ளன. கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் ஏராளமாக உள்ளன.
தற்போது பதவி வகிக்கும் சினாடு நிர்வாகிகளின் பதவி காலம், இன்றுடன் முடிகிறது. நிர்வாகிகளாக பதவியில் உள்ளவர்கள், நிதி முறைகேட்டில் ஈடுபட்டனர். தென் கேரளா டயோசிஸ் பேராயராகவும் உள்ள தர்மராஜ் ரசலத்துக்கு எதிராக, மோசடி, நிதி முறைகேடு புகார்கள் தொடர்பாக, கேரளாவில் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பேராயர் தொடர்பான இடங்களில், அமலாக்கத் துறையும் சோதனை நடத்தி உள்ளது. தற்போதைய நிர்வாகிகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். மாடரேட்டர் பதவியில் உள்ள தர்மராஜ் ரசலம், 67 வயதை எட்டுவதால், மீண்டும் போட்டியிட முடியாது.
உத்தரவு
அதனால், பேராயருக்கான ஓய்வு வயதை, 70 ஆக உயர்த்த பரிந்துரை கொண்டு வந்தனர். இதற்கு, 90 சதவீதம் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், தீர்மானம் நிறைவேறியதாக பதிவு செய்யப்பட்டது.
எனவே, பேராயருக்கான ஓய்வு வயது வரம்பை உயர்த்தும் தீர்மானம் செல்லாது என உத்தரவிட வேண்டும். சி.எஸ்.ஐ.,யை நிர்வகிக்க, ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும். சட்டவிதிகளை பின்பற்றி, சினாடு நிர்வாகிகள் தேர்தலை நடத்த வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர்கள் தங்சிவன், பரணீதரன் ஆஜராகினர்.
சினாடு கூட்டத்துக்கும், தேர்தலுக்கும் தடை விதிக்க மறுத்த நீதிபதி, தேர்தல் நடவடிக்கைகளை வீடியோ, ஆடியோ பதிவு செய்யவும், மறு உத்தரவு வரும் வரை, தேர்தல் முடிவை வெளியிடக் கூடாது எனவும் உத்தரவிட்டார். விசாரணையை, வரும் 30க்கு தள்ளி வைத்து, சம்பந்தப்பட்டவர்கள் பதில் மனுத் தாக்கல் செய்யவும், நீதிபதி உத்தரவிட்டார்.