மும்பை:'கிரிப்டோகரன்சி'கள் எனும், மெய்நிகர் நாணயங்களை தடை செய்ய வேண்டும் என்ற கருத்தை, மீண்டும் வலியுறுத்தி உள்ளார், ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ்.
மேலும், 'கிரிப்டோ' என்பவை, சூதாட்டத்தைத் தவிர வேறில்லை என்றும், அவற்றின் மதிப்பு என்பது, நம்ப வைப்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
பத்திரிகை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், இது குறித்து மேலும் கூறியுள்ளதாவது:
ஒவ்வொரு சொத்துக்கும், ஒவ்வொரு நிதி தயாரிப்புக்கும் சில அடிப்படை அதாவது, மதிப்பு இருக்க வேண்டும். ஆனால், கிரிப்டோ விஷயத்தில் அப்படி எந்த அடிப்படையும் இல்லை.
அனுமதிக்க முடியாது
அதற்கு எந்த மதிப்பும் இல்லை. அதன் சந்தை விலை அதிகரித்து வருவதற்கு காரணம், அதன் மதிப்பு அதிகரிப்பதாக நம்ப வைக்கப்படுவதால் தான்.
எந்த அடிப்படையும் இல்லாமல், அதன் மதிப்பு, முழுக்க முழுக்க நம்ப வைப்பதை சார்ந்து உள்ளது. அது 100 சதவீத யூகங்களாக உள்ளது. மிக அப்பட்டமாகச் சொன்னால், அது ஒரு சூதாட்டம் என்பதை தவிர வேறில்லை.
நம் நாட்டில் சூதாட்டத்தை அனுமதிக்காததால் அதை அனுமதிக்க முடியாது.
சூதாட்டத்தை அனுமதிக்க விரும்பினால், கிரிப்டோவை சூதாட்டமாக கருதி, அந்த சூதாட்டத்திற்கான விதிகளை வகுக்கவும்.
ஆனால் கிரிப்டோ என்பது நிச்சயமாக ஒரு நிதி தயாரிப்பு கிடையாது.
கட்டுப்பாடு நழுவும்
கிரிப்டோக்களை சட்டப்பூர்வமாக்குவது, பொருளாதாரத்தை அதிக டாலர்மயமாக்குவதற்கு வழிவகுக்கும்.
பெரும்பாலான கிரிப்டோக்கள், டாலரை சார்ந்தது என்பதால், நீங்கள் அதை வளர அனுமதித்தால், பொருளாதாரத்தில் 20 சதவீத பரிவர்த்தனைகள், தனியார் நிறுவனங்களால் வழங்கப்படும் கிரிப்டோக்கள் வாயிலாக நடைபெறும் நிலை ஏற்படும்.
பின்தங்க முடியாது
இதனால், பொருளாதாரத்தில் 20 சதவீத பண வினியோகத்தின் மீதான கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி இழக்கும்.
அத்துடன், பணவியல் கொள்கை மற்றும் பணப்புழக்கம் சம்பந்தமானவற்றை முடிவு செய்யும் திறனையும் இழக்கும். தயவுசெய்து என்னை நம்புங்கள், இவை வெற்று எச்சரிக்கை அல்ல.
ஓராண்டுக்கு முன்பு ரிசர்வ் வங்கி, இவை விரைவில் சரிந்துவிடும் என்று கூறியது. கடந்த ஆண்டு என்ன நடந்தது என்று பார்த்தால், அது கிரிப்டோ சந்தையான, எப்.டி.எக்ஸ்., வீழ்ச்சியில் முடிந்தது.
பணத்தின் எதிர்காலம், சி.பி.டி.சி.,யின் டிஜிட்டல் ரூபாய் போன்றவை தான் என நான் நினைக்கிறேன். நிறைய மத்திய வங்கிகள் அதைச் செய்து வருகின்றன.
இவ்விஷயத்தில் நாம் பின்தங்கி விடமுடியாது. ஆனால் அதே நேரத்தில், அதன் தொழில்நுட்பம் வலுவானதாகவும், மிகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கிரிப்டோக்களின் சந்தை விலை அதிகரித்து வருவதற்கு காரணம், அவற்றின் மதிப்பு அதிகரிப்பதாக நம்ப வைக்கப்படுவதால் தான்.