புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் என, இந்திய வணிக தலைவர்களிடம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், பெரும்பாலானோர் தெரிவித்துஉள்ளனர்.
'டெலாய்ட்' நிறுவனம், பல்வேறு துறைகளைச் சேர்ந்த வணிக தலைவர்களிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
அதில் கிட்டத்தட்ட 60 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள், நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அரசின் பல்வேறு முயற்சிகள் காரணமாக, பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என கருதுவதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
குறிப்பாக, அரசின் ஆத்மநிர்பர் பாரத், உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கச் சலுகை திட்டமான பி.எல்.ஐ., ரிசர்வ் வங்கியின் சாதகமான பணக் கொள்கைகள், மட்டுப்படுத்தப்பட்ட சில்லரை விலை பணவீக்கம், அன்னியச் செலாவணி கையிருப்பு, உள்கட்டமைப்பு செலவினங்கள் போன்றவை, வளர்ச்சி வேகத்தை தக்க வைக்கும் என தெரிவித்துள்ளனர்.
மேலும், டிஜிட்டல்மயமாக்கல் முயற்சிகள் சாதகமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். 70 சதவீதம் பேர், 'ஜி.எஸ்.டி., போர்ட்டல்' அரசாங்கத்தின் மிகவும் பயனுள்ள டிஜிட்டல் முயற்சியாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், 45 சதவீதம் பேர், அரசாங்கம் வரிவழக்குகளை குறைக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், மூலதன ஆதாய வரி அமைப்பை எளிமைப்படுத்த வேண்டும் என்ற தங்கள் எதிர்பார்ப்பையும் ஆய்வின்போது தெரிவித்து உள்ளனர்.