சென்னை நந்தனத்தில் தற்போது புத்தகத் திருவிழா களைகட்டி வருகிறது. ஆண்டுதோறும் நடந்து வரும். இவ்விழாவில் இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் பலர் கலந்துகொள்வர். புத்தக விழாக்களில் சுய முன்னேற்ற புத்தகங்கள், வெற்றிக் கதைகள், வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்கள், சமையல் குறிப்பு புத்தகங்கள் அதிகளவில் விற்பனையாகும். சுய முன்னேற்ற பேச்சாளர்கள் பலர் இதுபோன்று மக்கள் கூடும் விழாக்களில் பங்கேற்றுப் பேசுவது வழக்கம்.
![]()
|
நாம் அனைவருக்கும் பொதுவான ஒர் பிரச்னை உண்டென்றால் அது தன்னம்பிக்கை குறைவுதான். ஆங்கிலத்தில் பேசும்போது, அலுவலகப் பணி செய்யும்போது, சமைக்கும்போது, புதிய வேலைகளில் ஈடுபடும்போது, புதிய இடத்துக்குச் செல்லும்போது என அன்றாட வாழ்வில் எதை புதிதாகச் செய்தாலும் நமது தன்னம்பிக்கை அளவு குறைவது இயல்பு. இதுபோன்று தன்னம்பிக்கை குறையும்போது தன்னம்பிக்கையூட்டும் புத்தகங்கள் மற்றும் மேடைப் பேச்சுகள் நம்மை அதிகமாகக் கவரும். குறிப்பாக நமது ஆதர்ச சுய முன்னேற்ற பேச்சாளர் ஒலிப்பெருக்கி முன் நின்று ஆவேசமாகப் பேசும்போது அதனைக் காணும் நமக்கு ஆயிரம் யானைகளின் பலம் வந்துவிட்டதைப் போலத் தோன்றும்.
இதனாலேயே தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரி ஆண்டுவிழாக்கள், இலக்கிய மேடைகள், வர்த்தகக் கூட்டங்கள் என பற்பல இடங்களில் சுய முன்னேற்றப் பேச்சாளர்கள் புற்றீசல் போலப் பெருகி வருகின்றனர். இவ்வாளவு ஏன்..? சமீப காலங்களில் மத பிரசாரம் செய்வோர்கூட சுய முன்னேற்றப் பேச்சில் ஈடுபட்டு ஆதரவாளர்களைத் திரட்டி வருகின்றனர். இவர்களது சுய முன்னேற்ற பேச்சுகளைக் கேட்டால் நமக்கு தன்னம்பிக்கை மற்றும் உத்வேகம் பிறப்பது மறுக்க இயலாத விஷயம். ஆனால் எந்த வயதுவரை இவர்களது இந்தப் பேச்சு நம்மை ஈர்க்கும் என என்றாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? இதுகுறித்து விரிவாக அலசுவோம்.
![]()
|
பதின்பருவத்தில் இளம் சுயமுன்னேற்றப் பேச்சாளர்கள் எடிசன், வாரன் பஃபெட், ஷேக்ஷ்பியர் என உலகளாவிய பிரபலங்களின் வெற்றிக் கதைகளைக் கூறும்போது மாணவர்களுக்கு அளவுக்கதிகமான உத்வேகம் பிறக்கும். கல்லூரியில் படிக்கும்போது அதே பேச்சாளர் தலைக்கு டை அடித்து, ஃபிரஞ்சு பியர்டு வைத்து அதிகரிக்கும் தனது வயதைக் குறைத்துக்கொண்டு பேசும்போதும் உற்சாகமாக இருக்கும்.
வேலைக்குச் சென்று 15 ஆயிரம் சம்பளம் பெறும்போது தொலைக்காட்சியில் பொங்கல் விழா நிகழ்ச்சியில் அதே பேச்சாளர் ரிம்லெஸ் சாலேஸ்வர கண்ணாடி அணிந்து, ஜீன்ஸ், டி ஷர்ட் அணிந்து மார்டன் அங்கிள்போன்ற தோற்றத்துடன் பேசும்போது வாழ்க்கையின் நிதர்சனம் ஓரளவுக்குத் தெரிந்ததால் உற்சாகம் சற்று குறையும். 32 வயதில் திருமணம் முடிந்து இரு குழந்தைகளுக்குத் தந்தையாகும்போது பேஸ்புக் வீடியோவில் அதே பேச்சாளர் ஹாங்காங், கெனடா என சுற்றி அவரது குடும்பத்துடன் டிராவல் வீடியோ பதிவிட்டு சுய முன்னேற்றம் குறித்துப் பேசும்போது சலித்துப்போய் அடுத்த வீடியோவுக்குச் சென்றுவிடுவோம்.
நாற்பது தாண்டிய பின்னர் நாம் பணியாற்றும் நிறுவனத்தின் ஆண்டு விழாவின்போது பென்ஸ் காரில் வந்திறங்கும் முதியவரான அதே பேச்சாளர், அதே பழைய சுயமுன்னேற்றக் கதைகளைக் கூறும்போது, அவர் பேச்சை நேரில் காணக்கூட ஆவல் இன்றி அந்த இடத்தை விட்டு வெளியேறிவிடுவோம். இவரது சுய முன்னேற்ற கதைகளால் நம் வாழ்க்கைத் தரம் உயர்ந்ததோ இல்லையோ, அவரது வாழ்க்கைத் தரம் கடந்த 20 ஆண்டுகளில் பன்மடங்கு உயர்ந்துவிட்டது என்பதை அனுபவப் பூர்வமாக உணருவோம்.
இதுபோன்ற சுய முன்னேற்ற பேச்சில் உண்டாகும் சலிப்பு இயல்புதான் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். சிறு வயதில் அலிபாபாவும் 40 திருடர்களும் கதைகளை வியந்து கேட்ட நாம், தற்போது அந்த கதைகளைக் கேட்டால் சிரிப்போம். மனிதனுக்கு வயதாக ஆக தூக்கம், சிரிப்பு ஆகிய இரண்டும் குறைந்து மன முதிர்ச்சி அதிகரிக்கிறது. 40 வயதில் வாழ்க்கையின் நிதர்சனம் இதுதான் என உணர்ந்த பலருக்கு இதுபோன்ற சுய முன்னேற்ற கதைகளே தேவைப்படாது.
![]()
|
சுய முன்னேற்ற கதைகளில் திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படும் 'வாழ்க்கையில் வெற்றி' என்கிற தாரக மந்திரம் ஓர் கற்பனை இலக்கு என்பது நன்கு புரிந்துவிடும். நிம்மதியான வாழ்க்கைக்கு கடன், பகை, நோய் என்ற மூன்றைத் தவிர்த்தாலே போது எனப் புரியும். வாழ்வதற்குத்தான் பணமே தவிர வாழ்க்கையைத் தொலைக்க அல்ல எனப் புரியும். இந்த புரிதல் நிலை வர ஒருவிதத்தில் இந்த சுய முன்னேற்ற பேச்சாளர்களே நமக்கு உந்து சக்தியாக இருக்கின்றனர் என்பதையும் மறுப்பதற்கில்லை.