பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் இடையேயான கூட்டணியில் சண்டை துவங்கியுள்ளது. தன் மகனுக்கு முதல்வர் பதவியை வழங்கும்படி, நிதிஷ்குமாருக்கு லாலு பிரசாத் யாதவ் நெருக்கடி கொடுத்துள்ளார்.
பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்கிரஸ் அடங்கிய 'மகாகட்பந்தன்' கூட்டணி ஆட்சி நடக்கிறது.
கடந்த 2016ல் நடந்த சட்டசபை தேர்தலின்போது, இந்தக் கூட்டணி வென்றது.
ஆனால் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மீது, லஞ்ச ஊழல் புகார்கள் எழுந்ததால், கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் வெளியேறினார். பின், பா.ஜ.,வுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தார்.
பிரதமர் கனவில் நிதிஷ்
கடந்த 2020ல் நடந்த சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி அமைத்து போட்டியிட்டன. பா.ஜ., அதிக இடங்களில் வென்றபோதும், தேர்தல் ஒப்பந்தப்படி நிதிஷ்குமார் முதல்வராக தொடர முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்தாண்டு ஆகஸ்டில் ஐக்கிய ஜனதா தளம் இந்தக் கூட்டணியில் இருந்து விலகி, மீண்டும் மகாகட்பந்தன் கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்தது.
சட்டசபையில் அவருடைய கட்சிக்கு மிகக் குறைந்த உறுப்பினர்கள் இருந்தாலும், நிதிஷ்குமார் தொடர்ந்து முதல்வராக இருந்து வருகிறார். முன்னாள் முதல்வர் லாலு பிரசாதின் மகனான தேஜஸ்வி யாதவ், தற்போது துணை முதல்வராக உள்ளார்.
தற்போது பிரதமர் கனவில் உள்ள நிதிஷ்குமார், தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
வரும் 2025 பீஹார் சட்டசபை தேர்தலை தேஜஸ்வி யாதவ் தலைமையில் சந்திப்போம் என்று நிதிஷ்குமார் ஏற்கனவே கூறியுள்ளார்.
லாலு முட்டுக்கட்டை
இது ஒருபுறம் இருக்க, பீஹாரில், ௧௦க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வலுவாக உள்ள ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சியின் தலைவர் உபேந்திர குஷ்வாகா, 2021ல் ஐக்கிய ஜனதா தளத்துடன் தன் கட்சியை இணைத்தார்.
கட்சியில் நிதிஷ்குமாருக்கு அடுத்த இடம் தனக்கு கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்த்தார். மேலும் துணை முதல்வர் பதவியையும் அவர் எதிர்பார்த்தார்.
ஆனால், இதற்கு லாலு பிரசாத் முட்டுக்கட்டை போட்டார். முதல்வர் மற்றும் துணை முதல்வர் பதவியை ஐக்கிய ஜனதா தளத்துக்கு அளித்தால், தன் மகனின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால், அந்த முயற்சிக்கு லாலு பிரசாத் மறுப்பு தெரிவித்தார்.
தற்போது மீண்டும் பா.ஜ., கூட்டணிக்கே செல்லலாமா என்ற யோசனையில் உபேந்திர குஷ்வாகா ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், இந்தாண்டிலேயே, அதுவும் மிக விரைவிலேயே, துணை முதல்வராக உள்ள தன் மகன் தேஜஸ்வியை முதல்வர் பதவியில் அமர வைக்க வேண்டும் என, நிதிஷ்குமாருக்கு லாலு பிரசாத் யாதவ் நெருக்கடி கொடுத்து வருகிறார்.
கடும் குழப்பம்
ஒரு பக்கம் கட்சியில் இருந்து வெளியேற உபேந்திர குஷ்வாகா காய்களை நகர்த்தி வருகிறார். மறுபக்கம் முதல்வர் பதவியை தன் மகனுக்கு அளிக்க லாலு பிரசாத் நெருக்கடி தருகிறார். இதனால், நிதிஷ்குமார் கடும் குழப்பத்தில் உள்ளார்.
இந்நிலையில், கூட்டணி மற்றும் சொந்தக் கட்சியினரையே சமாளிக்க முடியாத நிதிஷ்குமாருக்கு, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த மாநில கல்வி அமைச்சர் சந்திரசேகர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ராமரின் பெருமையை குறிக்கும் 'ராமசரிதரமானஸ்' பக்தி பாடலை அவமதிக்கும் வகையில் பேசினார். இதற்கு, ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 'இந்த அரசு அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது என்பதை உணர வேண்டும்' என, ஐக்கிய ஜனதா தளம் கருத்து தெரிவித்தது.அதே நேரத்தில், 'பா.ஜ.,வினர் பேச்சுக்கு பதில் அளித்தே சந்திரசேகர் பேசினார். இதில் தவறு ஏதும் இல்லை' என, தேஜஸ்வி யாதவ் குறிப்பிட்டார். இதையடுத்து, இந்த சர்ச்சை, கூட்டணி கட்சிகள் இடையே கருத்து மோதலை ஏற்படுத்திஉள்ளது.
- புதுடில்லி நிருபர் -