''எங்க தாத்தா காலத்துல இருந்து, காளைகளை வளர்க்கிறோம்; அதுவும், காங்கயம் காளைகளை...'என மீசையை முறுக்கியபடி மிடுக்கு குறையாமல் சொல்லும் இளைஞர்கள் பலர். கடந்த வாரம், பெருந்துறையில் நடந்த காங்கயம் காளைகள் கண்காட்சியில் தான் இது.
கண்காட்சி நடந்து கொண்டிருக்கும் போதே, இரண்டு மாடு பூட்டிய மாட்டு வண்டியில், வேகமாக வந்து மைதானம் அடைந்தார் ராணி என்ற நடுத்தர வர்க்கத்து பெண். 'தாத்தா காலத்துல இருந்தே நாட்டு மாடுகளை வளர்க்கிறோம்; நான் ரொம்ப வருஷமா மாட்டு வண்டி ஓட்டறேன்; மாடுகளை உழவுக்கும் பயன்படுத்தறோம்,' என்றார், மாட்டு வண்டியை ஓட்டி வந்த களைப்புக்கூட தெரியாமல்.
'நாட்டு மாட்டினத்தில், மயிலை தான் ஒசத்தி. வெள்ளை உடம்பில் இயற்கையாக படிந்தது போன்று இருக்கும் கருப்பு நிறமே அதன் இயல்பு என்றார் ஒருவர்; மற்றொரு முதியவரோ, காரி இன மாடுகளின் கொம்பில் வரி வரியாய் ஒரு அடையாளம் இருக்கும்; இந்த மாதிரி மாடுகள் அமைவது, தெய்வாதீனமானது என்றார். இப்படியாக, ஒவ்வொருவருக்கும் காளை மாடு வளர்ப்பின் மீதான தங்களில் ஆர்வம், பக்தியை வெளிப்படுத்தினர்.
வருமானம் சார்ந்து என்பதை காட்டிலும், காளை மாடு வளர்ப்பை, தங்கள் வாழ்வியல் சூழலின் ஒரு அங்கமாக மாற்றிக் கொண்டுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும்.
“அழிந்து வருகிறதா காளை மாட்டினம்? இந்த கேள்விக்கு, ஜல்லிக்கட்டு, ரேக்ளா போன்ற வீர விளையாட்டுகள் இருக்கும் வரை, காளைகளும் இருக்கும்'' என்றார் ஒரு இளைஞர். “வீட்டுக்கு ஒரு காளை, இனப்பெருக்கம் சார்ந்த வளர்ப்பு முறை இருக்கும் வரை காளை இனம் அழியாது என்றார் இன்னொரு இளைஞர்.
'ஜல்லிக்கட்டுக்கும் அனுப்ப மாட்ேடாம்; ரேக்ளா வண்டிக்கும் பூட்ட மாட்டோம்; உழவுக்கும் பயன்படுத்த மாட்டோம். அழகுக்காக மட் டுமே வளர்க்கிறோம் என்றார்மற்றொருவர்.