கடைசியாய் மிஞ்சிய
விதை நெல்லும்
உலையேறிய கொதித்த
கொடுமையின்
தாக்கத்தில்
உழவன் நஞ்சையுண்டு
உயிர்துறக்கும் அந்நொடி
நம்மை சுற்றிலும்
அருந்த காத்திருக்கிறது
நமக்கான விஷம்.
திருப்பூரில் நுாலக வாசகர் வட்டம் சார்பில் நடந்த கவிதை வாசிப்பு நிகழ்ச்சியில், எழுத்தாளர் இன்போ அம்பிகா எழுதிய 'பச்சைய மழை' கவிதை தொகுப்பில் இருந்து வாசிக்கப்பட்ட இக்கவிதை விவசாயியின் தற்கொலை குறித்து பேசுகிறது.
அடர்ந்த வனத்திற்குள் கையை பிடித்து அழைத்து செல்வதை போல, தனது கவிதை உலகத்துக்கு, வாசகனை அழைத்து செல்லும் இன்போ அம்பிகா, நம்மிடம் பேசியதாவது...
பிறந்து வளர்ந்தது எல்லாமே செங்கோட்டையில் தான். சிறு வயதில் இருந்தே தமிழ் மீது அதீத பற்று. பத்தாம் வகுப்பு படிக்கும் போது வகுப்பறையில் கவிதை போட்டி நடந்தது. அப்போது நான் எழுதிய கவிதையை வகுப்பறையில் வாசிக்கும் போது சகமாணவர்கள் கைதட்டினர்.
அதுவே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் தமிழ் ஆசிரியர் லலிதா கவிதை எழுத ஊக்கப்படுத்தினர். அது தான் என் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது. வகுப்பறையில் ஏதாவது கிறுக்கிக்கொண்டே இருப்பேன்.
குடும்பத்தில் வறுமை காரணமாக பள்ளி செல்ல தடை இருந்த போதும் தமிழ் ஆசிரியர் பணம் செலவு செய்து படிக்க வைத்தார். அவர் செய்த உதவியால் படிப்பில் உரிய கவனம் செலுத்தினேன். மதுரை மருத்துவ கல்லுாரியில் பார்மசிஸ்ட் படித்து முடித்தேன்.
இலக்கியமும் ஜோதிடமும்
சொந்த ஊரில் போதிய வருவாய் இல்லாததால் வேலை தேடி திருப்பூர் நகரம் வந்தடைந்தோம். மருந்துக்கடை நடத்தி கொண்டே, கவிதை எழுதினேன். கவிதையின் எண்ணிக்கை அதிகமானதும், 'பச்சைய மழை' என்ற பெயரில் கவிதை தொகுப்பு வெளியிட்டேன். காலப்போக்கில் ஜோதிடமும் கற்றுக்கொண்டேன். இலக்கியமும், ஜோதிடமும் சேர்ந்து பயணிப்பதை கடவுள் அருளியதாக கருதுகிறேன்.
சமூகத்தில் பெண்ணாக பிறந்ததற்கு பெருமைப்பட வேண்டும். பெண்ணுக்கு எல்லா விஷயங்களிலும் தனித்துவம் இருக்கும். வெற்றி என்பது வீட்டில் இருந்தும், வெளியில் இருந்தும் வெற்றி பெறலாம். ஆனால் எங்கு வெற்றி பெறுகிறோம் என்பது முக்கியமல்ல; நம் குறிக்கோள் வெற்றியடைய வேண்டும் என்பதே உறுதியாக இருக்க வேண்டும். வெற்றி பெற ஒவ்வொரு முறையும் நம் பாதைகளை செப்பனிட்டு நேர்மையாக செல்ல வேண்டும்.
இப்போதைய இளைய சமூகம் மொபைல் போன், போதை பொருளுக்கு அடிமையாகியுள்ளனர். அவற்றை விடுத்து புத்தக வாசிப்பு பழக்கத்திற்கு வரவேண்டும். சினிமா ரசிகர்கள் தங்கள் எதிர்காலத்தை பாதிக்கிறது என்பதை கவலைப்படுவது இல்லை. எனவே இளைய தலைமுறை தனது தவறான போக்குகளை மாற்றி கொண்டு தன்னைஉணர வேண்டும்.
கவிதையின் எண்ணிக்கை அதிகமானதும்
புத்தகம் போடும் எண்ணமும் தோன்றியது. அதில் உருவானது தான் பச்சை மழை கவிதை தொகுப்பு. காலப்போக்கில்
ஜோதிடமும் கற்றுக்கொண்டேன்.
இலக்கியமும், ஜோதிடமும் சேர்ந்து பயணிப்பதை கடவுள் அருளியதாக கருதுகிறேன்.