ஆர்.பரிமள ரெங்கன், சென்னையில் இருந்து எழுதுகிறார்: ஜனாதிபதியாக டாக்டர் ராஜேந்திர பிரசாத் இருந்த காலகட்டத்தில், ஒரு முறை குடியரசு தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்று, தேசியக் கொடி ஏற்றி வைத்த அவர், அவசர அவசரமாக இல்லத்திற்கு கிளம்பிச் சென்றார்.
'இதிலென்ன இருக்கிறது' என, பலர் கேட்கலாம். ஆம்... அன்று அவரது வீட்டில் ஒரு மரணம் நிகழ்ந்து விட்டது; அதாவது, அவரின் பேத்தி மறைந்து விட்டார்; உடல் வீட்டில் இருந்ததால், அதை காணச் சென்றார்.
இந்த துக்க விஷயத்தை, அவர் வெளியே சொல்லி, யாரையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்த விருப்ப மில்லை; தன் சொந்த பிரச்னை, நாடு முழுதும் நடைபெற்ற குடியரசு தின விழாவில் எதிரொலிக்கவும் விரும்பவில்லை; அவ்வளவு கடமை உணர்வு!
அதுபோலவே, சமீபத்தில் நம் பிரதமர் மோடி, இறந்த தன் தாயின் உடல் தகனம் செய்யப்பட்ட உடன், தன் கடமையை செய்ய கிளம்பி விட்டார். எவ்வளவு வயதானாலும், அவருக்கு தாய் தானே அவர்; மனம் எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும்.
ஆனால், அதையெல்லாம் ஒதுக்கி விட்டு, இரண்டு மணி நேரத்திலேயே தனக்கு தானே சுதாரித்து, கடமையை செய்ய ஆரம்பித்து விட்டார். தன்னால், தன் சொந்த பிரச்னையால், எந்த தடங்கலும் நாட்டுக்கு வரக்கூடாது என்ற எண்ணமே இதற்கு காரணம்.
அவருடைய கடமை உணர்ச்சியும், தேசப்பற்றும் எவ்வளவு மகத்தானவை... எவ்வளவு மன உறுதி வேண்டும்... இக்காலத் தில் இப்படியொரு தலைவரை பார்க்க முடியுமா...
ஆனால், இங்குள்ள ஒரு அரசியல்வாதி, 'என் மச்சினி யின் வளைகாப்பில் பங்கேற்க வேண்டி இருந்ததால், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்கவில்லை' என்று தெரிவித்தார். எவ்வளவு வித் தியாசம் பாருங்கள்... உண்மையான தலைவரை, மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
விஷப்பரீட்சை வேண்டாம் முதல்வரே!
எஸ்.செபஸ்டின், சிவகாசி, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் சத்துணவுடன், வாரம் ஒருமுறை கோழி இறைச்சி வழங்க, முதல்வர் ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார். அதனால், இது தொடர்பாக, 'பிராய்லர்' கோழிப் பண்ணை உரிமையாளர்களுடன், சில அமைச்சர்கள் பேச்சு நடத்தி வருகின்றனர் என, செய்தி வெளியாகி உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில், பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒருமுறை, 'சிக்கன்' வழங்க, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது; அதே பாணியை, தமிழகத்திலும் பின்பற்ற நினைக்கிறார் ஸ்டாலின். இது, நல்ல திட்டம் தான் என்றாலும், சிறப்பாக செயல்படுத்த முடியுமா என்பது சந்தேகமே!
சிறுவர்கள் காய்கறிகள் சாப்பிடும் போது, அவர்களுக்கு உடல் ரீதியாக எந்தப் பாதிப்பும் வராது. அவை அழுகி இருந்தால், அவற்றை சமையலில் சேர்க்காமல், தனியாக அகற்றி விடலாம்; ஆனால், பண்ணையிலிருந்து வரும் கோழிகளுக்கு பலவித நோய்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. அத்துடன், இறந்த கோழிகளின் இறைச்சியையும், மற்ற இறைச்சியுடன் சேர்த்து, 'சப்ளை' செய்து விடுவர். ஏற்கனவே, கெட்டுப் போன முட்டைகளை சப்ளை செய்ததாக, சில நாட்களுக்கு முன் புகார்கள் வந்ததை, முதல்வர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும், இறைச்சியை சரியான முறையில் சமைக்காமல் அல்லது சமைத்து நெடுநேரம் கழித்து மாணவர்களுக்கு வழங்கினாலும், 'புட் பாய்சன்' போன்ற பிரச்னைகள் வரலாம்; இதனால், மாணவர்களின் உயிருக்கே ஆபத்து நேரிடலாம்.
தற்போது, பள்ளிகளில் சத்துணவு சமையலர்களாக இருப்போர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் எனில், 'அவர்கள் சமைத்த உணவை, எங்களின் குழந்தைகள் சாப்பிட அனுமதிக்க மாட்டோம்' என, ஜாதி துவேஷங்களில் ஈடுபடுவோர் உள்ளனர். அது மட்டுமின்றி, சுத்த சைவ உணவு சாப்பிடும் மாணவர்களும் இருப்பர். மற்ற மாணவர்களுக்கு கோழிக்கறி வழங்கும் போது, சைவ மாணவர்களை தனியாக அமர்த்தி, சைவ உணவு வழங்குவது மற்றும் அவர்களுக்கு தனியாக சமைப்பது போன்ற பிரச்னைகள் உருவாகலாம்.
மாணவர்களுக்கு அதிகமான ஊட்டச்சத்து வழங்க வேண்டும் என்றால், பால் வழங்க ஏற்பாடு செய்யலாம். அத்துடன் சைவ உணவுகள் பலவற்றிலே, புரதச் சத்துகள் அதிகம் உள்ளன; அவற்றை வழங்க முன்வரலாம். இவற்றால் எந்தப் பாதிப்பும் மாணவர்களுக்கு ஏற்படாது. அது மட்டுமின்றி, இவற்றில் ஊழல் செய்வதற்கான வாய்ப்புகளும் குறைவு.
எனவே, 'வீதியில் போகும் சனியனை, வீட்டுக்குள் வா' என, பிரச்னையை விரும்பி அழைக்கும் செயலாகவே, சத்துணவில் கோழி இறைச்சி வழங்கும் நடவடிக்கை அமையும். இந்த விஷயத்தில் விஷப் பரீட்சையில் இறங்குவதை, முதல்வர் ஸ்டாலின் தவிர்க்க வேண்டும்.
முற்போக்கு சிந்தனை இல்லாதோர் உணர வேண்டும்!
ச.ஜான் பிரிட்டோ, திண்டுக் கல்லில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், 2,500 கிராம கோவில் திருப்பணிகளுக்காக, தலா, ௨ லட்சம் ரூபாய் வழங்கும் விழா, சென்னையில் நடந்தது. இந்நிகழ்ச்சி யில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'நாங்கள் மதவாதத்திற்கு மட்டும் தான் எதிரி; மதத்திற்கு அல்ல' என்று கூறியுள்ளார்.
'கேட்பவன் கேணை யனாக இருந்தால், கேப்பை யில் நெய் வடிகிறது' என்பது போல உள்ளது, முதல்வரின் மேடைப் பேச்சு. ஹிந்து மதத்திற்கு எதிரியல்ல என்றால், தீபாவளிக்கும், கிருஷ்ண ஜெயந்திக்கும் வாழ்த்துச் சொல்ல வேண்டியது தானே? அதைச் செய்ய மறுப்பது ஏன்?
அடுத்து, 'தமிழ் மொழியில், கோவில்களில் அர்ச்சனை செய்ய வேண்டும்' என்கிறார், தமிழ் ஞானியின் தவப்புதல்வர் ஸ்டாலின்.
தமிழ்மொழி இலக்கிய நயம் சார்ந்தது. அதில், சில சொற்கள் ஒன்றுபட்டாலோ, பிளவுபட்டாலோ ஒட்டு மொத்த கருப்பொருளுமே மாறி விடும். உதாரணமாக, 'எங்கோ மனம் பறக்குது' என்ற வரிகளை, கோவில் அர்ச்சனை பாணியில் வேகமாக கூறினால், 'எங்கோமணம் பறக்குது' என்றல்லவா ஒலிக்கும்.
அதனால் தான், தேவ மொழியாகிய சமஸ்கிருதத்தை சித்தரித்து, நம் முன்னோர் கடவுளை வழிபட்டுள்ளனர். இதை அறியாமல், 'தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும்' என, புதுமையான மொழிப்போரை அர்ச்சகர்கள் மீது திணிக்கிறது, தி.மு.க., அரசு.
'அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்' என்ற சட்டத்தை கொண்டு வந்து, 'எல்லா மனிதர்களையும் சமத்துவமாக்கினோம்' என்று பெருமை அடித்துள்ளார் முதல்வர். இதை, ஹிந்து தர்மம் என்றோ செய்து விட்டது. அதன் வெளிப்பாடே விநாயகர் சதுர்த்தி விழா.
வீட்டுக்கு வீடு விநாயகர் சிலையை அவரவர் வசதிக்கேற்ப வாங்கி, மூன்று நாட்கள் துாய்மை மற்றும் விரதம் கடைப்பிடித்து, ஒவ்வொருவரும் வீட்டில் அர்ச்சகராக மாறி, வழிபாடு செய்ய வேண்டும் என்பதாகும்.
'எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்கிறார் திருவள்ளுவர். அதன்படி மெய்ப்பொருளை உணர்ந்து பணி செய்வது தான், ஹிந்து தர்ம கோட்பாடு. இதை, முற்போக்கு சிந்தனை இல்லாத தி.மு.க.,வினர் உணர வேண்டும்.
அவர்கள் கூறினால் சரி; கவர்னர் கூறினால் தவறா?
தி.ஸ்ரீராம் விஷ்ணு, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக கவர்னர் ரவி, நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், 'தமிழ்நாடு என்பதை, தமிழகம் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்' என்று சொல்லி விட்டார். உடனே, ஆட்சியாளர்களும், அவர்களை ஆதரிக்கும் கூட்டணி கட்சியினரும் எகிறிக் குதிப்பதோடு, கவர்னர் ஏதோ விபரீதமானதை சொல்லி விட்டதைப் போன்று, அவரை விமர்சித்து வருகின்றனர்.
முதலில் தமிழகம் என்று கூறியது யார்? இந்த வார்த்தை கவர்னருக்கு தெரியுமா? இங்குள்ள ஆட்சியாளர்களும், அரசியல் தலைவர்களும் தான், எதற்கு எடுத்தாலும், 'ஒளிரும் தமிழகம், ஒளிமயமான தமிழகம், வளமான தமிழகம், வளர்ச்சி பாதையில் தமிழகம்' என்று, அடுக்கு மொழியில் பேசி வந்தனர்.
இப்போது, அதையே கவர்னர் பேசினால் குற்றம் என்கின்றனர். கவர்னர்கள் எப்போதுமே, 'தமிழ்நாடு' என்று தான் கூறுவர்; திராவிட செம்மல்கள் தமிழகம் என்று கூறியதால் தான், அவரும் அப்படி சொல்வது நன்றாக இருக்கும் என்று சாதாரணமாக தெரிவித்துள்ளார்.
தி.மு.க.,வினர் கோடு போடுகின்றனர்; அவர் ரோடு போடுகிறார்... அவ்வளவு தான். தமிழகம் என்று கூறிய கவர்னரை, தமிழக அரசியல்வாதிகள் விமர்சிப்பது, 'மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம்' என்ற பழமொழிக்கு ஏற்றதாக உள்ளது.
எது எப்படியோ... 'தமிழகம், தமிழ்நாடு, மத்திய அரசு, ஒன்றிய அரசு, அம்மா, மதர், அப்பா, பாதர்' எல்லாமே, ஒரே அர்த்தம் தரும் வார்த்தைகள் தான்... கவர்னர் தமிழகம் என்று சொல்வதால், நம் மாநிலம் ஒன்றும் அண்டார்டிகா போலவும், திராவிட செம்மல்கள் தமிழ்நாடு என்று கூறுவதால், நம் மாநிலம் அமெரிக்கா மாதிரியும் ஆகிவிடாது.
அவரவர் கஷ்டப்பட்டு உழைத்தால் மட்டுமே சாப்பிட முடியும். இங்கு உள்ளவர்களுக்கு, அரசியல் செய்ய அவ்வப்போது ஏதாவது ஒரு காரணம் வேண்டும்; இப்போது, அவர்களுக்கு கிடைத்துள்ள காரணம், 'தமிழகம், தமிழ்நாடு!' அவ்வளவு தான்!
திடீரென தோன்றி மறையும் கோமாளி!
ஆர்.கோவிந்தராஜ், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கவர்னர் ரவிக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின், சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்ததற்காக நடிகர் சத்யராஜ், 'முதுகெலும்புள்ள முதல்வர், தமிழ் மக்களின் உண்மையான முதல்வர்' என, ஸ்டாலினை காணொளி ஒன்றில் புகழ்ந்து பேசியுள்ளார். திரைப்படத்தில் மட்டுமின்றி, தமிழக மக்கள் மீது அதிக அக்கறை இருப்பதாக, நிஜ வாழ்விலும் நடித்துக் கொண்டிருப்பவர்களில் ஒருவர் தான் சத்யராஜ்.
இவரைப் போன்ற சிலர் எப்போதாவது ஒரு முறை, திடீரென மக்கள் முன் தோன்றி, அரசியல் பேசுவர்; பின், நீண்ட காலம் காணாமல் போய் விடுவர். அதுபோல, தங்களுக்கு சாதகமாக முதல்வர் ஸ்டாலின் ஏதாவது செய்ய வேண்டும்; அவரின் நன்மதிப்பை பெற வேண்டும் என்ற, நப்பாசையில் புகழ் பாடியிருக்கிறார் சத்யராஜ் என்பதில் சந்தேகமில்லை.
சத்யராஜ் தமிழக மக்கள் நலனில் உண்மையிலேயே அக்கறை கொண்டவர் எனில், கழக ஆட்சியாளர்கள் மக்கள் நலனுக்கு எதிராக செயல்படும் போது, ஆட்சிக்கு எதிராக குரல் கொடுத்திருக்க வேண்டும். பல ஆண்டுகளாக சினிமா துறையில் உள்ள சத்யராஜ், இதுவரை தி.மு.க., அரசுக்கு எதிராக, ஒரு முறை கூட குரல் கொடுத்ததாக தகவல் இல்லை.
பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம் பெறாது என, சமீபத்தில் தமிழக அரசு அறிவித்த போது, அதற்கு எதிராக பல கட்சிகளும், விவசாய சங்கங்களும் குரல் கொடுத்தன.
பின்னர், விவகாரம் நீதிமன்றத்தின் கதவுகளை தட்டியதும், பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம் பெறும் என, கழக ஆட்சியாளர்கள் அறிவித்தனர். அப்போது, விவசாயிகளுக்கு ஆதரவாக சத்யராஜ் குரல் எழுப்பாதது ஏன்? விவசாயி களுக்கு ஆதரவாக பேசினால், முதல்வர் ஸ்டாலினின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் அமைதி காத்தாரோ?
அரசியல் பேசினால், எல்லாவற்றையும் சேர்த்து தானே பேச வேண்டும். தங்களுக்கு வேண்டிய காரியத்தை சாதிப்பதற்காக, முதல்வரை தனிப்பட்ட முறையில் துதி பாடுவது வேறு; அரசியல் ரீதியாக முதல்வரை புகழ்வது வேறு.
கவர்னருக்கு எதிராக முதல்வர் தீர்மானம் நிறைவேற்றியதை பாராட்டும் சத்யராஜ், தேர்தல் நேரத்தில், தி.மு.க., அளித்த வாக்குறுதிகளில் பல நிறைவேற்றப்படாமல் உள்ளன. அதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கேள்வி எழுப்புவாரா? படத்தில் வேண்டுமானால், சத்ய ராஜ் வில்லனாக இருக்கலாம்; அரசியலை பொறுத்தமட்டில், அவர் திடீரென தோன்றி மறையும் கோமாளியே!
ஆந்திர தம்பதிக்கு 'ராயல் சல்யூட்!'
அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
ரத்த தானம் மற்றும் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதில், நாட்டிலேயே தமிழகம் தான் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. அதற்கு காரணம், ௨௦௦௮ செப்டம்பர் ௨௩ல், சிறுவன் ஹிதேந்திரன் உடல் உறுப்புகளை, அவனின் அன்பு பெற்றோரான, டாக்டர்கள் அசோகன் - புஷ்பாஞ்சலி தம்பதி தானமாக வழங்கியதே. அப்போது முதல் ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் ௨௩, 'உடல் உறுப்புகள் தான விழிப்புணர்வு' தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த, 19 மாத ஆண் குழந்தை, தொலைக்காட்சி ஸ்டாண்டு மீது ஏறி விளையாடும் போது தவறி விழுந்ததில், தலையில் அடிபட்டு சிகிச்சைக்காக, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
மூளைச்சாவு அடைந்த அந்தக் குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன் வந்ததால், அதன் கல்லீரல், மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நான்கு மாத குழந்தைக்கும், சிறுநீரகங்கள் வேலுார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும், 19 வயது பெண்ணுக்கும் பொருத்தப்பட்டு, அவர்கள் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
இதற்காக, குழந்தையின் பெற்றோருக்கும், மருத்துவர்களுக்கும் நன்றி கூறலாம். ஏற்கனவே, நம் மாநிலத்தில் இரண்டரை வயது குழந்தையின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டதாக கூறப்பட்டது. தற்போது, ௧௯ மாத குழந்தையின் உடல் உறுப்புகள் தானத்தால், இது போன்ற தானங்களுக்கு வயது ஒரு தடையல்ல என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது.
உடல் உறுப்புகள் தானம் பெற பதிவு செய்து, பல லட்சம் பேர் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில், ௧௯ மாத குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் அமைந்துள்ளது.
உலகிலேயே ஸ்பெயின் நாடு தான், உடல் உறுப்புகள் தானத்தில் முதலிடத்தில் உள்ளது. அந்த இடத்தைப் பிடிக்க, நாம் நீண்ட துாரம் பயணிக்க வேண்டும். இருந்தாலும், உடல் உறுப்புகள் தானம் குறித்த விழிப்புணர்வை, பள்ளி, கல்லுாரிகளில் இருந்தே துவக்க, மத்திய - மாநில அரசுகள் முன்வர வேண்டும். அதேநேரத்தில், ௧௯ மாத குழந்தையின் உடல் உறுப்புகளை தானமாக தர முன்வந்த, ஆந்திர மாநில தம்பதிக்கு, 'ராயல் சல்யூட்!'